மகாராஷ்டிராவில் சிறையில் இருந்து வெளிவந்த பிரபல தாதாவை அவரது ஆதரவாளர்கள் பிரம்மாண்டமான பேரணி நடத்தி அழைத்து சென்றனர். அதனால் ஏற்பட்ட குழப்பத்தால் தாதாவை கைது செய்து மீண்டு சிறையில் அடைத்தனர்.
மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கை சேர்ந்தவர் ஹர்ஷத் பட்னாகர். பிரபல தாதாவாக வலம் வந்தவர். இவர் மீது கொலை முயற்சி, திருட்டு, வன்முறை உட்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. மகாராஷ்டிரா போதை குற்றவாளிகள், அபாயகரமான ஆட்கள் தடுப்பு சட்டத்தின் கீழ் (எம்பிடிஏ) ஹர்ஷத் பட்னாகர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். கடந்த 23-ம் தேதி சிறையில் இருந்து
அவர் விடுவிக்கப்பட்டார். அப்போது அவரது ஆதரவாளர்கள் கார்கள், 15-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்களில் குவிந்தனர்.
பெத்தல் நகரில் இருந்து அம்பேத்கர் சவுக் வரை ஹர்ஷத் பட்னாகரை பிரம்மாண்ட பேரணியாக அழைத்து சென்றனர். காரின் சன் ரூப் பகுதி வழியாக தனது ஆதரவாளர்களைப் பார்த்து கையசைத்து மிகவும் மகிழ்ச்சியாக பேரணியில் பங்கேற்றார் பட்னாகர். இந்த காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவியது. அதில், பட்னாகரின் ஆதரவாளர்கள், ‘மீண்டும் வருக’ என்று குறிப்பிட்டு வீடியோவை வைரலாக்கினர்.
இந்த வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து போலீஸார் தாதா ஹர்ஷத் பட்னாகர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 6 பேரை கைது செய்து மீண்டும் சிறையிலடைத்தனர். அனுமதி பெறாமல் பேரணி நடத்தியது மற்றும் பொது இடங்களில் குழப்பத்தை விளைவித்தது போன்ற குற்றச்சாட்டுகள் பட்னாகர் மீது சுமத்தப்பட்டுள்ளன.