பயிற்சி வகுப்புகளுக்குச் செல்வதாக கூறிவிட்டு, வீட்டை விட்டு வெளியேறிய மூன்று பாடசாலை மாணவிகள் மற்றும் ஒரு மாணவர் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
தலவாக்கலை பொலிஸ் எல்லைக்குட்பட்ட கிரேட் வெஸ்டர்ன் தோட்டத்தின் லூசா பிரிவில் வசிப்பவர்களே மாயமாகியுள்ளனர்.
கடந்த 14ஆம் திகதி முதல் 14 மற்றும் 16 வயதுக்குட்பட்ட மூன்று பாடசாலை மாணவிகள் மற்றும் மாணவர் ஒருவரும் காணாமல் போயுள்ளதாக பிள்ளைகளின் பெற்றோர்கள் தலவாக்கலை பொலிஸில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.
தலவாக்கலை கிரேட் வெஸ்டர்ன் தோட்டத்தின் லூசா பிரிவில் வசிக்கும் மாணவர்கள் தமிழ் மகா வித்தியாலயத்தில் 11ஆம் ஆண்டு மற்றும் 09ஆம் ஆண்டு கல்வி பயின்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 14ம் திகதி அவர்கள் பயிற்சி வகுப்புகளுக்கு செல்வதற்காக சென்றதாகவும்; அதன் பிறகும் வீடு திரும்பாததால் போலீசில் புகார் செய்ததாக பெற்றோர்கள் தெரிவித்தனர்.
காணாமல் போன மூன்று மாணவிகள் மற்றும் மாணவர் உறவினர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் பல விசேட பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளன.




