கொரோனா வைரஸின் மூன்றாவது அலையை எதிர்த்துப் போராடும் கனடாவின் மிக மோசமான பாதிப்புக்குள்ளான மாகாணமான ஒன்டாரியோவிற்கு இந்தியா உட்பட சர்வதேச மாணவர்களின் நுழைவை இடைநிறுத்த கனடா அரசு திட்டமிட்டு வருகிறது.
2020’ஆம் ஆண்டில் கனடாவில் 5,30,540 சர்வதேச மாணவர்கள் இருந்தனர். அவர்களில் அதிகபட்சம் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் (34 சதவீதம்), இதையடுத்து இரண்டாம் இடத்தில் சீனா (22 சதவீதம்) உள்ளது.ஒன்டாரியோவில் அதிகபட்சமாக வெளிநாட்டு மாணவர்கள் 2,42,825 அல்லது 46 சதவீதமாக உள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்றுநோயை பரப்புவதை எதிர்த்து மாகாணத்தின் தலைவர் டக் ஃபோர்டின் வேண்டுகோளைத் தொடர்ந்து, ஒன்டாரியோவில் சர்வதேச மாணவர்களின் வருகையை நிறுத்துவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ செய்தியாளர் சந்திப்பின் போது தெரிவித்தார்.
இருப்பினும், மாற்றம் எப்போது நடைமுறைக்கு வரும் அல்லது எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது குறித்து இன்னும் தெளிவு இல்லை. சர்வதேச மாணவர்கள் தற்போது கனடாவின் கொரோனா பயண விதிகளிலிருந்து விலக்கு பெற்றுள்ளனர்.
இந்தியாவில் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட பி 1.617 மாறுபாட்டின் 36 பாதிப்புகள் மாகாணத்தில் அடையாளம் காணப்பட்ட பின்னர், அத்தியாவசியமற்ற பயணங்களை தடை செய்யுமாறு ஃபோர்டு மத்திய அரசிடம் அழைப்பு விடுத்தார்.
கொரோனா வைரஸின் பரவலைத் தணிக்க மாகாணங்களுடன் நெருக்கமாக பணியாற்றுவதற்கான தனது நோக்கங்களை ட்ரூடோ மீண்டும் வலியுறுத்தினார் மற்றும் எந்தவொரு அத்தியாவசியமற்ற பயணத்திற்கும் எதிராக எச்சரித்தார்.