25.8 C
Jaffna
January 9, 2025
Pagetamil
இந்தியா

வேட்புமனுத் தாக்கலுக்கு முன் கங்கையில் நீராடிய பிரதமர் மோடி; கங்கை குறித்த அபூர்வ புராணத் தகவல்கள்!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் மூன்றாவது முறையாக வாரணாசித் தொகுதியில் போட்டியிடுகிறார். அதற்காக நேற்று (மே 14) காலை வாரணாசியில் பிரதமர் மோடி வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு முன்பாக கங்கை நதியில் நீராடி சிறப்பு பூஜைகள் நடத்தினார்.

வேத மந்திரங்கள் ஓத, பிரதமர் மோடி கங்கைநதியில் மலர்கள் தூவி வணங்கினார். பிறகு அங்கு கூடியிருந்த பத்திரிகையாளர்களிடம் நடுவே பேசினார்.

“கங்கா மாதாவின் தத்துப்பிள்ளை நான். என்னுடைய தாய் மறைவுக்குப் பின்னர் கங்கா மாதா எனக்கு நெருக்கமாக இருப்பதாக உணர்கிறேன். கங்கை என்னை வலுப்படுத்தித் தேற்றினார். இப்படித்தான் கங்கை ஆறு ஒரு தாயைப் போல அனைவரையும் காக்கிறது” என்று குறிப்பிட்டார்.

இந்தியாவின் 7 புண்ணிய நதிகளில் கங்கை முதன்மையானது. கங்கையில் நீராடினால் சகல பாவங்களும் நீங்கும் என்பது பெரும்பாலானோர் நம்பிக்கை. பர்வதராஜன், மைனாகுமாரி மகளாகவும், ஈசனின் ஒரு மனைவியாகவும் விளங்கியவள் கங்கை என்கிறது புராணம்.

இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தின் கங்கோத்ரியில் உற்பத்தி ஆகும் பாகீரதி நதி, தேவப்பிரயாகை எனுமிடத்தில் அலக்நந்தா ஆற்றுடன் கலந்து கங்கையாகிறது.

பிறகு பிறகு உத்தரப் பிரதேசம், பீகார் மாநிலங்களைக் கடந்து, பல தேசத்தின் பகுதிகளைச் செழிக்க வைத்து, புண்ணிய நதியாகப் பாய்கிறது. இது ஹூக்லி, பத்மா என இரு ஆறுகளாகப் பிரிந்து மேற்கு வங்காளம், வங்கதேசம் வழியாகப் பகுதிக்கு ஒரு நதியாகப் பாய்கிறது. அங்கு உலகின் மிகப்பெரிய செழிப்பான கழிமுகத்தை உருவாக்கிப் பெரும் ஆர்ப்பரிப்போடு வங்காள விரிகுடாவில் கலக்கிறது.

2525 கி.மீ தூரங்கள் ஓடும் கங்கை நதி, தனது வழித்தடத்தில் கங்கோத்ரி, ரிஷிகேஷ், ஹரித்வார், பிரயாகை, வாரணாசி, பாட்னா, கொல்கத்தா ஆகிய நகரங்களையும் புண்ணிய க்ஷேத்ரங்களையும் உருவாக்கி உள்ளது. பல நூறு புண்ணிய நூல்களும் புனித இதிகாசங்களும் போற்றும் ஜீவநதி இது. சிவனிடம் வேண்டி பகீரதனால் கொண்டு வரப்பட்டதாகவும், ஸ்ரீராமனால் கடக்கப்பட்ட புண்ணிய நதியாகவும், பீஷ்மரின் தாயாகவும் பல புராணங்களால் இது போற்றப்படுகிறது.

கங்கையைக் குறிப்பிடாமல் இந்தியாவின் வரலாற்றைக் குறிப்பிட முடியாது என்ற அளவுக்கு இந்தியாவின் ஒவ்வொரு வளர்ச்சியிலும் வீழ்ச்சியிலும் கங்கையின் பங்கு உண்டு. வளர்ச்சி, ஆன்மிகம், ஆட்சி, வாணிகம் என அநேக முறையில் கங்கை தனது பிடியில் இந்தியாவை வைத்துள்ளாள் என்றே சொல்லலாம். கங்கையின் வடிநிலங்களில் உருவான ராஜ்ஜியங்களும் நகரங்களும் முக்கியமானவை. காசி, கன்னோசி, காம்பில்யா, கரா, பிரயாகை, பாடலிபுத்திரம், ஹாஜிப்பூர், முன்கிர், பாகல்பூர், முர்சிதாபாத், பாரம்பூர், நவத்வீப், சப்தகிராம், கொல்கத்தா, டாக்கா போன்றவை முக்கியமானவை.

சூரிய குலத்து அரசன் திலீபன் மகன் பகீரதன், தனது முன்னோர்கள் பெற்ற சாபத்தால் சாம்பலான செய்தியை வசிஷ்டர் கூறக் கேட்டு, அவர்கள் நற்கதி பெறத் தவம் புரிந்தான். புனித கங்கை நீரைக் கொண்டு அவர்களின் சாம்பலை நனைத்தால் மோட்சம் கிடைக்கும் என்றார் பிரம்மா. அவர் கூறியபடி ஈசனிடம் ஆகாய வாஹினியான கங்கையை வேண்டினார் பகீரதன்.

கங்கையின் வேகத்தை பூமி தாங்காது என்பதால் ஈசனே கங்கையைத் தனது திருமுடியில் தாங்கி பூமி ஏற்றுக் கொள்ளும் அளவுக்குப் பூமியில் விடப்பட்டாள். இதனால் ஈசன் கங்காதரன் எனப்பட்டார். இதனால் கங்கை யுகம்தோறும் இறந்தவர்கள் நற்பேறு அடையும் விதமாக ஓடிக் கொண்டிருக்கிறாள் என்கிறது புராணம். காசியில் இறந்தால் மோட்சம் என்பதே கங்கைக் கரையில் அந்த உடல் எரிக்கப்படுவதாலேயே என்கின்றன புராணங்கள். இறந்து போனவர்களின் அஸ்தியைக் கரைத்தால் மோட்சம் நிச்சயம் என்பது நம்பிக்கை.

நீரெல்லாம் கங்கையின் அம்சம் என்பதால் ஊரெங்கும் இவள் கங்கையம்மன், கங்காதேவி என்று கோயில் கொண்டு நீர் வளமைக்கு ஆதாரதேவியாக எழுந்தருளி இருக்கிறார். கங்கா தேவி ஈசனின் மனைவி என்பதால் திங்கள் பிறைசூடி, நெற்றிகண்ணோடு, காட்சியளிக்கிறார். வெண்ணிறப் பட்டுடுத்தி, வெண் தாமரையில் வீற்றிருக்கிறாள். நான்கு கரங்களில் அபயவரத ஹஸ்த முத்திரைகளையும், பின்னிரு கைகளில் தாமரையும், பொற்குடம் ஏந்தியிருக்கிறார். கங்கையின் வாகனமாக முதலை உள்ளது. ஈசனுக்கும் கங்கா தேவிக்கும் வீரபத்திரர் என்ற மகன் பிறந்தார். அவருக்கு கங்கை வீரன், கங்கை வீரேஸ்வரர் என்ற பெயருமுண்டு என்கின்றன புராணங்கள்.

காசியில் அதிகாலையில் அசி காட்டிலும், மாலையில் தசுவமேத காட்டிலும் தினமும் கங்கை ஆற்றுக்கு ஆர்த்தி வழிபாடு நடத்தப்படுகிறது. இது சப்த ரிஷிகளால் எடுக்கப்பட்ட நிகழ்வு என்பதைக் குறிக்கும்விதமாக இன்றும் தொடர்ந்து பல நூறு ஆண்டுகளாகத் தொய்வின்றி நடத்தப்படுகிறது. இதை தரிசித்தவர்கள் மோட்சமும் முக்தியும் அடைவார்கள் என்பதும் நம்பிக்கை. 30 நிமிடங்கள் நடைபெறும் இந்த ஆரத்தியில் 7 பூஜாரி இளைஞர்கள் பட்டாடை அணிந்து கங்கை ஆற்றை நோக்கிப் பாடி விதவிதமான ஆரத்திகளால் கங்கையைத் தொழுது வணங்குகிறார்கள்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தும் குழுவின் தலைவன் கைது!

Pagetamil

திருச்சி அரசு மருத்துவமனை மருத்துவர்களின் அசத்தல் சாதனை

east tamil

போதைப் பொருள் கடத்தல் வழக்கு: நடிகர் மன்சூர் அலிகான் மகனுக்கு நிபந்தனை ஜாமீன்

Pagetamil

நடிகர் அல்லு அர்ஜுனுக்கு மீண்டும் நோட்டீஸ்

Pagetamil

தமிழகத்தில் வாக்காளர் அதிகரிப்பு

Pagetamil

Leave a Comment