25.4 C
Jaffna
January 24, 2025
Pagetamil
இந்தியா

“ஊழலை எதிர்த்துப் போராட மோடி என்னிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும்” – கேஜ்ரிவால்

ஊழலை எதிர்த்துப் போராட பிரதமர் நரேந்திர மோடி விரும்பினால், தன்னிடம் இருந்து அவர் கற்றுக்கொள்ள வேண்டும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

மதுபான கொள்கை ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு உச்ச நீதிமன்றம் நேற்று (மே.10) ஜாமீன் வழங்கியது. இதையடுத்து, இன்று டெல்லியில் உள்ள அனுமன் கோயிலில் வழிபாடு மேற்கொண்ட அரவிந்த் கேஜ்ரிவால், பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் பேசியதாவது: திகார் சிறையில் இருந்து 50 நாட்கள் கழித்து தற்போது வெளியே வந்திருக்கிறேன். தேர்தலுக்கு இடையில் சிறையிலிருந்து வெளியே வருவேன் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. இது பகவான் அனுமனின் ஆசிர்வாதம்.

ஆம் ஆத்மி ஒரு சிறிய கட்சி. நாங்கள் இரண்டு மாநிலங்களில் ஆட்சியில் இருக்கிறோம். ஆனால், எங்கள் கட்சியை ஒழித்துவிட பிரதமர் உறுதியாக இருக்கிறார். அரவிந்த் கேஜ்ரிவால், மணீஷ் சிசோடியா, சஞ்சய் சிங், சத்யேந்திர ஜெயின் எனும் நான்கு முக்கியத் தலைவர்களை அவர்கள் சிறைக்கு அனுப்பினார்கள். இதன்மூலம், ஆம் ஆத்மி கட்சியை ஒழித்துவிடலாம் என அவர்கள் நினைத்தார்கள். ஆனால் உண்மை என்னவென்றால் நாங்கள் ஒரு கட்சி மட்டுமல்ல, ஒரு சிந்தனை.

ஊழலுக்கு எதிராக நான் போராடுகிறேன் என்று பிரதமர் கூறுகிறார். ஆனால் ஊழல்வாதிகள் அனைவரும் பாஜகவில் இணைகிறார்கள், அவர்களும் ஏற்றுக்கொள்கிறார்கள். ஊழலை எதிர்த்துப் போராட விரும்பினால், பிரதமர் மோடி என்னிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும். எல்லா திருடர்களும் பொய்யர்களும் பாஜகவில் சேர்ந்துவிட்டார்கள், அவர்களின் வழக்குகளும் மறைந்துவிட்டன. எதிர்க்கட்சிகளுக்கு ஒரு செய்தியை சொல்வதற்காகவே அவர்கள் என்னை கைது செய்தனர். கேஜ்ரிவாலைக் கைது செய்ய முடியும்போது, யாரையும் கைது செய்ய முடியும் என்பதே அந்த செய்தி.

பாஜக மிகவும் ஆபத்தான ஒன்றை செய்கிறது. அவர்களின் நோக்கம் “ஒரே நாடு, ஒரே தலைவர்”. தேர்தலில் வெற்றி பெற்றால் எதிர்க்கட்சி தலைவர்கள் அனைவரையும் அவர்கள் சிறைக்குள் தள்ளுவார்கள். ஒரே தேசம், ஒரே தலைவர் என்பதில் கவனம் செலுத்துவதால்தான், தங்கள் கட்சிக்குள் இருந்தும் வசுந்தரா ராஜே, மனோகர் லால் கட்டார் உள்ளிட்ட பல தலைவர்களை அழித்துவிட்டனர். அவர்கள் அடுத்ததாக யோகி ஆதித்யநாத்தின் பின்னால் செல்வார்கள்.

22 நாட்கள் அவகாசம் வழங்கியதற்காக உச்ச நீதிமன்றத்துக்கு நன்றி. இந்த நாட்களில் நாடு முழுவதும் சென்று நாட்டுக்காக போராடுவேன். நமது தேசத்தை சர்வாதிகாரத்தின் பிடியில் இருந்து காப்பாற்றுங்கள் என்று 140 கோடி மக்களிடமும் மன்றாட வந்துள்ளேன். தயவுசெய்து என் தேசத்தை காப்பாற்றுங்கள். என் இதயம், ஆன்மா மற்றும் என்னிடம் உள்ள அனைத்தையும் இந்த நாட்டுக்காக அர்ப்பணிப்பேன்.

தேர்தல் முடிவுகள் எவ்வாறு இருக்கும் என்பது தொடர்பாக நான் என்ன நினைக்கிறேன் என்பதைத் தாண்டி, பல்வேறு நிபுணர்களிடம் பேசினேன். ஜூன் 4 ஆம் தேதி அவர்கள் (பாஜக) ஆட்சி அமைப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை. அவர்களுக்கு 200-220 இடங்கள் கிடைக்கும். அதற்கு மேல் கிடைக்காது. மத்தியில் இண்டியா கூட்டணி ஆட்சி அமைக்கும். அந்த ஆட்சியில் ஆம் ஆத்மி கட்சி இருக்கும். டெல்லி மாநில அந்தஸ்தை பெற ஆம் ஆத்மி கட்சி போராடும்.

ஹேமந்த் சோரன் முதல்வர் பதவியை ராஜினாமா செய்திருக்கக் கூடாது. நாம் ராஜினாமா செய்தால், அவர்கள் எந்த எதிர்க்கட்சி முதல்வரையும் கைது செய்து அவர்களின் அரசாங்கத்தை முடித்துவிடுவார்கள். நான் ராஜினாமா செய்யாததற்குக் காரணம் பதவி பசி அல்ல; சர்வாதிகார ஆட்சியை எதிர்த்துப் போராட வேண்டும் என்பதற்காகத்தான். இவ்வாறு அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மகாராஷ்டிராவில் ரயில் விபத்து: 12 பேர் உயிரிழப்பு, 40 பேர் காயம்

east tamil

‘எல்லை தாண்டி செல்ல வேண்டாம்’ – தமிழக மீனவர்களுக்கு மீன்வளத் துறை அறிவுரை

Pagetamil

மருதங்கேணி பொலிஸாரால் சற்றுமுன் இரண்டு பெண்கள் கைது: மேலும் இருவருக்கு அழைப்பு

east tamil

ஆசிரியரின் ஆபாச பேச்சால் தற்கொலைக்கு முயன்ற 10ம் வகுப்பு மாணவி

east tamil

மாணவியை மிரட்டி நிர்வாண வீடியோ எடுத்த மாணவர்கள் கேரளாவில் கொடூரம்

east tamil

Leave a Comment