திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன், உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 69.
கடந்த 1980ஆம் ஆண்டு வெளியான ‘நிழல்கள்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘பூங்கதவே தாழ் திறவாய்’ என்ற பாடல் மூலம் பாடகியாக திரை உலகில் உமா ரமணன் அறிமுகமானார். அந்த படத்துக்கு இளையராஜா இசை அமைத்திருந்தார். தீபன் சக்ரவர்த்தி உடன் இணைந்து அந்தப் பாடலை அவர் பாடி இருந்தார்.
கேளடி கண்மணி, தூறல் நின்னு போச்சு, வைதேகி காத்திருந்தாள், தில்லுமுல்லு, பன்னீர் புஷ்பங்கள், முதல் வசந்தம், ஒரு கைதியின் டைரி, புதுமைப் பெண், தென்றலே என்னை தோடு, திருப்பாச்சி உள்ளிட்ட பல படங்களில் இவர் பின்னணி பாடலுக்கு பாடியுள்ளார்.
பெற்றோரின் விருப்பத்துக்காக முறையாக இசை கற்றுக்கொண்டவர் உமா ரமணன். தனது கல்லூரிக் காலங்களில் பல்வேறு போட்டிகளில் பங்கெடுத்து பரிசுகள் பல வெல்கிறார். இந்த சமயத்தில், தனது வருங்கால கணவரான ஏ.வி.ரமணனை சந்திக்கிறார். அவரோ, தான் நடத்திவரும் மேடைக் கச்சேரிகளில் பாடல்களைப் பாடுவதற்கான பெண் குரலைத் தேடிக் கொண்டிருக்கிறார். உமா ரமணின் குரல் அவரது கச்சேரிக்கும், வாழ்க்கைக்கும் ஆதார ஸ்ருதியாக மாறுகிறது. இருவரும் இணைந்து ஆயிரக்கணக்கான மேடைக் கச்சேரிகளில் பாடி வருகின்றனர்.
ஏ.வி.ரமணன், உமா ரமணன் இருவரும் இணைந்து ‘பிளே பாய்’ என்ற இந்தி திரைப்படத்தில் பாடினர். அதன்பின்னர் எஸ்.வி.வெங்கட்ராமன் இசையில் 1977ஆம் ஆண்டு ‘கிருஷ்ணலீலா’ என்ற படத்தில் ஒரு பாடலை பாடினர். இந்த நேரத்தில்தான் 1980இல் இளையராஜா இசையில் ‘நிழல்கள்’ திரைப்படம் வெளியானது. அந்தப் படத்தில் வந்த ‘பூங்கதவே தாழ் திறவாய்’ பாடல் உமா ரமணனுக்கு தமிழ் திரை உலகில் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றுத் தந்தது. இப்பாடல் இசை விரும்பிகளின் பாடல் சேமிப்புகளில் தவிர்க்க முடியாத இடத்தைப் பிடித்திருக்கும்.
‘பூங்கதவே’ பாடல் உருவமைப்பில் ஒளிந்திருக்கும் அனைத்து இசை அற்புதங்களையும் பாடலை பாடிய தீபன் சக்கரவர்த்தி – உமா ரமணன் குரல்கள் அத்தனை அழகாக வெளிப்படுத்தியிருக்கும். மென்மை எப்படியிருக்கும் என்பதை எளிமையாக விளக்க, இந்தப் பாடலின் சரணங்களில் உமா ரமணன் பாடியிருக்கும் ‘ம்’ என்ற ஓர் எழுத்தை உற்றுக் கேட்டாலே போதும் என்பதே நிதர்சனம்.
தொடர்ந்து அதே ஆண்டு அவரது கணவர் இசையில் வெளியான ‘நீரோட்டம்’ , இளையராஜா இசையில் ‘மூடுபனி’ ஆகிய படங்களில் உமா ரமணன் பாடியிருந்தார். 1981 இல் வெளிவந்த ‘பன்னீர் புஷ்பங்கள்’ படத்தில் வந்த ‘ஆனந்த ராகம்’ பாடல் உமா ரமணனின் திரையிசைப் பயணத்தில் மற்றொரு மகுடமாக அமைந்தது.