வடமாநிலங்களில் போஜ்புரி படங்கள் மிகவும் பிரபலம். போஜ்புரி படங்களில் நடித்து வந்தவர் அம்ரிதா பாண்டே(27). போஜ்புரி மட்டுமல்லாது இந்தி படங்கள் மற்றும் வெப்சீரிஸ்களிலும் நடித்து வந்தார்.
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த அம்ரிதா போஜ்புரி படங்களில் நடித்து வந்தாலும் மும்பையில் தனது கணவர் சந்திரமணியுடன் வசித்து வந்தார். அவர் தனது கணவருடன் கடந்த 18ம் தேதி பீகாரில் உள்ள பாகல்பூருக்கு தனது சகோதரியின் திருமணத்திற்காக சென்றார். திருமணம் முடிந்தவுடன் அம்ரிதாவின் கணவர் மும்பைக்குத் திரும்பிவிட்டார். ஆனால் அம்ரிதா தொடர்ந்து பீகாரில் வசித்து வந்தார்.
அம்ரிதா வீட்டில் தனியாக இருந்த போது தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு முன்பு அவர் தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் இரண்டு படகில் பயணிக்கிறோம். ஆனால் அதில் ஒன்றை மூழ்கடிப்பதன் மூலம் வாழ்க்கை எளிதாகிறது என்று வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸ் வைத்திருந்தார்.
அதோடு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிதாகத் திருமணம் செய்துகொண்ட தன் சகோதரி மற்றும் அவரின் கணவருக்கு வாழ்த்துத் தெரிவித்து இருந்தார்.
ஆனால் அம்ரிதா திடீரென விபரீத முடிவை எடுத்துள்ளார். தற்கொலைக்கு முன்பு கடிதம் எதையும் அவர் எழுதி வைத்திருக்கவில்லை. இதுகுறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இது குறித்து அவரது குடும்பத்தினர் கூறுகையில், `படங்களில் போதிய வாய்ப்பு இல்லாத காரணத்தால் மன அழுத்தத்தில் இருந்தார். இதனால் மன அழுத்தத்திற்கு சிகிச்சை எடுத்து வந்தார்’ என்று குறிப்பிட்டனர்.




