“நானும் ஒரு எம்.பி.யாக இருக்க வேண்டும் என்று இந்த முடிவை எடுத்துள்ளேன். கமலாலயத்தில் தான் எனது மூச்சு உணர்வுபூர்வமாக இருந்துகொண்டு இருக்கிறது” என்று மீண்டும் பாஜகவில் இணைந்தபின் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
தெலங்கானா ஆளுநர், புதுச்சேரி துணை நிலை ஆளுநராக பதவி வகித்து வந்த தமிழிசை சில தினங்கள் முன் தனது பதவிகளை ராஜினாமா செய்தார். அரசியலில் இறங்கப்போவதாக அறிவித்த அவர் தமிழகத்தில் இருந்து தேர்தலில் போட்டியிட போவதாகவும் தெரிவித்தார். இந்நிலையில், தமிழிசை இன்று (புதன்கிழமை) தமிழக பாஜகவில் மீண்டும் தன்னை இணைத்துக்கொண்டார்.
மாநிலத் தலைவர் அண்ணாமலை, மத்திய இணையமைச்சர் எல்.முருகன் ஆகியோர் முன்னிலையில் இணைந்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழிசை, “நான் எடுத்துள்ள முடிவு, கஷ்டமான முடிவு என்று அண்ணாமலை கூறினார். கஷ்டமான முடிவை இஷ்டமான முடிவாக எடுத்துள்ளேன். நானும் ஒரு எம்பியாக இருக்க வேண்டும் என்று இந்த முடிவை எடுத்துள்ளேன். கமலாலயத்தில் தான் எனது மூச்சு உணர்வுபூர்வமாக இருந்துகொண்டு இருக்கிறது. இரண்டு ராஜ் பவன், அதன் வசதிகள், பணியாட்கள் என எவ்வளவு இருந்தாலும் ராஜ்பவனை விட்டுவிட்டு மக்கள் பவனமான கமலாலயத்தில் நுழைந்துள்ளேன். இறைவனுக்கு நன்றி சொல்லிக்கொள்கிறேன்.
அண்ணாமலையின் கரங்களை சாமானிய தொண்டனாக இருந்து பிரதமர் மோடி மூன்றாவது முறையாக ஆட்சியமைக்க வலுப்படுத்துவேன். எனது கடுமையான உழைப்பு பாஜகவோடு இருக்கும். மீண்டும் இந்த தமிழிசை உங்கள் சகோதரியாக, உங்கள் அக்காவாக வந்துள்ளேன். தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும்.
தேர்தலில் நிற்க வேண்டும் என்ற ஆசை இருப்பதை கட்சியிடம் தெரிவித்தேன். எந்த தொகுதியில் நிற்க வேண்டும் என்பதை கட்சி தலைமை முடிவு செய்யும். அதில் களமிறங்குவேன். மக்கள் பணி செய்ய வேண்டும் என்று ஆசை எனக்கு எப்போதும் இருக்கிறது. எம்.பி.யாக நாடாளுமன்றத்தில் பேச வேண்டும் என்பதற்காக மீண்டும் அரசியலில் களமிறங்கியுள்ளேன்.
பாஜக அளவுக்கு பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிற கட்சியை பார்க்க முடியாது. நிர்வாகங்களில் பெண்களுக்கு பாஜக அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது. ஆளுநராக பணியாற்றிய காலங்கள் மிகப்பெரிய நிர்வாக அனுபவத்தை பெற்றுள்ளேன்.
நான் சென்ற பிறகு தமிழகத்தில் கட்சி மிகப்பெரிய வளர்ச்சியை பெற்றுள்ளது. மிக வேகமாக வளர்ந்துள்ளது. இந்த தேர்தலில் மிக சிறப்பான கூட்டணியை அமைத்துள்ளார்கள். தாமரை தமிழகத்தில் உயர்ந்துகொண்டே செல்கிறது. மிக அபரிமிதமான வளர்ச்சியை தமிழக பாஜக பெற்றுள்ளது. அதற்கு பிரதமர் மோடியின் தமிழக கூட்டங்களே சாட்சி.
எனக்கு பதவிகள் கிடைத்தது மேஜிக் இல்லை. கடுமையான உழைப்பினால் கிடைத்தவை. இந்த கட்சியில் சாமானியர்கள் எல்லோருக்கும் இப்படி வாய்ப்பு கிடைக்கிறது. கடந்த காலங்களில் திமுக மீது நிறைய விமர்சனங்கள் உள்ளன. ஆளுநராக இருந்ததால் அதை வெளியில் சொல்லவில்லை.
ஆளுநர் பதவி தேவையில்லை என்றால் மத்தியில் கூட்டணியில் ஆட்சியில் திமுக இருந்தபோது ஆளுநரை எடுத்திருக்கலாமே. எதிர்க்கட்சியாக இருக்கும்போது ராஜ்பவன் கதவை தட்டுகிறார்கள். எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஒரு நிலைப்பாடு, ஆளுங்கட்சியானால் ஒரு நிலைப்பாடு என்று திமுக உள்ளது” என்று தமிழிசை கூறினார்.