வவுனியா வடக்கு, நெடுங்கேணி வெடுக்குநாறி மலை ஆதிசிவன் கோயிலில் சிவராத்திரி வழிபாட்டில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தமிழர்கள், பொலிசாரால் குண்டுக்கட்டாக தூக்கி வெளியேற்றப்பட்டுள்ளனர்.
கோயில் நிர்வாகம், அரசியல் செயற்பாட்டாளர்கள், பிரதேச இளைஞர்கள் என 8 பேர் நெடுங்கேணி பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வெடுக்குநாறி மலை ஆதிசிவன் கோயிலில் சிவராத்திரி வழிபாட்டில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்களை மாலை 6 மணிக்கு அங்கிருந்து வெளியேறுமாறு பொலிசார் அறிவித்ததை தொடர்ந்து, பதற்றம் ஏற்பட்டிருந்தது.
கோயிலுக்குள் துப்பாக்கி, பொல்லுகள் தாங்கியவாறு சப்பாத்து அணிந்து உள்நுழைந்த பொலிசார், வழிபாட்டில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்களை பலாத்காரமாக- குண்டுக்கட்டாக தூக்கி வெளியே கொண்டு சென்றனர். இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அவரும் குண்டுக்கட்டாக தூக்கி வெளியே கொண்டு செல்லப்பட்டார்.
கோயிலில் அன்னதானத்துக்காக தயாராகிக் கொண்டிருந்த உணவுப்பொருட்களையும் பொலிசார் பறித்தனர்.
கோயிலில் இருந்து அனைவரும் வெளியேற்றப்பட்டுள்ளனர். கோயில் நிர்வாகிகள், பூசகர், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயற்பாட்டாளர், பொதுமக்கள் என 8 பேர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.




