மின்சாரக் கட்டணக் குறைப்பு காரணமாக முன்னர் அதிகரிக்கப்பட்ட உணவக உணவுப் பொருட்களின் விலைகளும் மார்ச் 5 நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் குறைக்கப்படும் என அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்ஷான் தெரிவித்தார். உற்பத்திச் செலவு அதிகரிப்பு காரணமாக, அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தினால் கடந்த சனிக்கிழமை முதல் உணவகங்களில் உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டன.
அதன்படி, ஒரு கப் தேநீரின் விலை 5 ரூபாவாலும், ஒரு கப் பால் தேநீரின் விலை 10 ரூபாவாலும், சாதம் மற்றும் மதிய உணவுப் பொதி ஒன்றின் விலை 25 ரூபாவாலும், பிரைட் ரைஸ் மற்றும் கொத்துவின் விலை 50 ரூபாவாலும், சிற்றுண்டிகளின் விலை 10 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டிருந்தன.
எவ்வாறாயினும், மின்சாரக் கட்டணம் குறைக்கப்பட்டதன் காரணமாக நேற்று (5) நள்ளிரவு முதல் மீண்டும் உணவக உணவுப் பொருட்களின் விலைகள் முன்னைய விலைகளுக்கு குறைக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத் தலைவர் தெரிவித்துள்ளார்.
திங்கட்கிழமை (4) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மின்சாரக் கட்டணங்களை 21.9 வீதத்தால் குறைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது.




