பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த மனிதர், 20 ஆயிரம் பொம்மைகளை சேர்த்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவை சேர்ந்த பெர்சிவல் லியுக், கிராபிக்ஸ் டிசைனராக பணியாற்றி வருகிறார். இவருக்கு சிறு வயதில் இருந்தே, பொம்மைகளை சேகரிப்பதில் அலாதியான ஆர்வம் இருந்து வந்தது. இவருக்கு 5 வயது இருக்கும்போது, அவரது தாயார், மேக்டொனால்ட் உணவகத்திற்கு அழைத்து சென்று இருந்தார். அங்கு உள்ள கடையில், அவருக்கு பொம்மை வாங்கித் தந்துள்ளார். அந்த பொம்மை லியுக்கிற்கு மிகவும் பிடித்துப் போகவே, அதுபோன்றதொரு பொம்மைகளை சேகரிக்க துவங்கி உள்ளார்.
தான் வாங்கினது, தனக்கு அன்பளிப்பாக வந்தது, பிறந்தநாள், நண்பர்களின் இல்ல விழாக்கள் என எங்கு சென்றாலும், அந்த பகுதியில் இருக்கும் கடைகளில் இருந்து பொம்மைகளை வாங்குவதை லியுக் வழக்கமாக கொண்டு இருந்தார். தற்போது லியுக்கிற்கு வயது ஐம்பதை கடந்துள்ளது. 3 மாடி கட்டடத்தில் வசித்து வரும் லியுக், தனது வீட்டில் தற்போது 20 ஆயிரம் பொம்மைகளை வைத்து உள்ளார். 2014 ஆம் ஆண்டில், இது கின்னஸ் சாதனையாக அங்கீகரிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
தான் இதுவரை சேகரித்த பொம்மைகளை எல்லாம், ஒரு அருங்காட்சியகம் அல்லது பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட வேண்டும் என்பதே தனது லட்சியம் என்று தெரிவித்து உள்ள லியுக், இது தனது குழந்தை பருவம் மட்டுமல்லாது, தன்னை சார்ந்தவர்களின் குழந்தை பருவ நினைவுகளை அவர்களுக்குள் ஏற்படுத்தும் என்று நம்பிக்கை தெரிவித்து உள்ளார்