கம்பளை, புபுரஸ்ஸ பிரதேசத்தில் நேற்று (09) பிற்பகல் ஒருவர் மின்சார கம்பியில் சிக்கி மின்சாரம் தாக்கியதில் துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளார்.
புபுரஸ்ஸ, லெவன்வத்த பகுதியைச் சேர்ந்த அழகன் கணேசன் (38) என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்தார்.
பக்கத்து வீட்டில் இருந்து குறித்த நபரின் வீட்டிற்கு இழுக்கப்பட்ட மின்சார கம்பியில் சிக்கி அவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ரூ.16,000 மின்சார கட்டண நிலுவை செலுத்தப்படாததால், குறித்த நபரின் வீட்டு மின் இணைப்பை மின்சார சபை துண்டித்துள்ளது.
அதன் காரணமாக 1,6 ஆம் தரங்களில் படிக்கும் பிள்ளைகளின் படிப்பு மற்றும் இதர வேலைகளை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ள நிலையில், அதற்கு பரிகாரமாக பக்கத்து வீட்டில் இருந்து இந்த வீட்டிற்கு மின்சார கேபிளை இழுத்து மின்சாரம் எடுக்க முயற்சித்துள்ளார்.
அப்போது மின்சாரம் தாக்கி அந்த நபர் உயிரிழந்தார்.
உயிரிழந்தவரின் மனைவி கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் தொழில் நிமித்தம் வெளியூர் சென்றுள்ளார். இரண்டு பிள்ளைகள் மற்றும் தனது தந்தையுடன் அந்த வீட்டில் வசித்த அழகன் கணேசனே உயிரிழந்தார்.




