தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரு பெண்கள் உயிரிழந்ததுடன் மேலும் நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இலங்கை வங்கியின் பரவகும்புக கிளையின் உதவி முகாமையாளராக கடமையாற்றிய அம்பலாந்தோட்டை பாரகம பகுதியைச் சேர்ந்த சமரசிங்க கொடித்துவக்கு ஆராச்சிகே உமேஷிகா மதுமி (வயது 30), மற்றும் அவரது தாயார் எடிமுனி ரீட்டா ஹரியட் டி சொய்சா (வயது 56) ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
விபத்தில் உயிரிழந்த தாய், கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று அம்பலாந்தோட்டை பாரகம பிரதேசத்தில் உள்ள அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்ற போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பெண்கள் மற்றும் மற்றுமொரு குழுவினர் பயணித்த வாகனம், கொட்டாவையில் இருந்து தெற்கு அதிவேக வீதியில் மத்தறை நோக்கி சென்றுகொண்டிருந்த போது குருந்துகஹஹட்கெம பிரதேசத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
முன்னால் சென்ற லொறியுடன் வாகனம் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை கலக்கத்தால் இவ்விபத்து நேர்ந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
விபத்தில் காயமடைந்த தாய் மற்றும் மகள் மற்றும் சாரதி கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் தாயும் மகளும் உயிரிழந்தனர்.
சாரதி கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.