யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் “கொடுத்த காசுக்கு மேல கூவியவருக்கு ஆதரவாக இன்று யாழ்ப்பாண மாவட்ட கிராமிய கடற்றொழிலாளர் அமைப்புக்களின் சம்மேளம் என குறிப்பட்ட அமைப்பினர் ஊடக சந்திப்பை நடத்தினர்.
நேற்று (28) யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நடந்தது.
கூட்டத்தின் ஆரம்ப கட்டத்தில், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தீவிர ஆதரவாளரான வடமராட்சியை சேர்ந்த ஒருவர்- மீனவர் சங்கத்தின் பிரதிநிதியென்ற போர்வையில் கூட்டத்திற்கு வந்திருந்தவர்- அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை அளவு கணக்கில்லாமல் புளுகிக் கொண்டிருந்தார். இதை கேட்டுக் கொண்டிருந்த மற்றவர்களிற்கு எல்லாம் விளங்கியது.
கொடுத்த காசுக்கு மேல கூவுகிறார், அமைச்சரை புகழ்வதற்கெனவே அவர் கூட்டத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார் போலுள்ளது என கூட்டத்தில் இருந்தவர்கள் தமக்குள் கிண்டலாக பேசிக் கொண்டனர்.
இந்திய மீனவர் அத்துமீறலை இலங்கை அரசு வேடிக்கை பார்க்கும் நிலையில், கடற்றொழில் அமைச்சராக டக்ளஸ் தேவானந்தாவும் கையாலாகாதவராக இருக்கும் யதார்த்தத்தை நாடாளுமன்ற உறுப்பினர்கள் செ.கஜேந்திரன், சி.சிறிதரன் சுட்டிக்காட்டிய போது, இரு தரப்புக்குமிடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.
இந்த சமயத்தில், கூட்டத்திற்கு அழைத்து வரப்பட்டிருந்த டக்ளஸின் ஆதரவாளர் எழுந்து கூச்சலிட்டு பேசத்தொடங்கினார். அவர் கூச்சலிட்டு பேசி- காடைத்தனமாக செயற்பட்டபடி- மண்டபத்தின் மையப்பகுதியை நோக்கி முன்னேறினார்.
அந்த ஆசாமியின் நடத்தை தமக்கு அச்சுறுத்தல் விடுப்பதாக இருந்ததை நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் சுட்டிக்காட்டினார்.
இந்த விதமான கூட்டங்களில், இவ்வாறு அச்சுறுத்தல் விடுத்த செயற்படும் ஆசாமிகளை மண்டபத்தை விட்டு வெளியேற்றுவதே வழக்கம். எனினும், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அதை செய்யவில்லை. அவர் கடற்றொழில் அமைப்பின் பிரதிநிதியென சப்பைக்கட்டு கட்டிக் கொண்டிருந்தார்.
காடையர்களை அழைத்து வந்து கூட்டம் நடத்துகிறீர்களா என செ.கஜேந்திரன் எம்.பி, சுட்டிக்காட்டி கேள்வியெழுப்பினார்.
பின்னர், காடைத்தனமாக நடந்து கொண்ட ஆசாமியை பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் கட்டுப்படுத்தினர்.
இந்த பின்னணியில், யாழ்ப்பாண மாவட்ட கிராமிய கடற்றொழிலாளர் அமைப்புக்களின் சம்மேளம் என குறிப்பட்ட அமைப்பினர் ஊடக சந்திப்பை நடத்தினர். அவர்கள் செ.கஜேந்திரன் எம்.பியை கண்டித்தனர்.
யாழ் மாவட்ட கடற்றொழில் அமைப்புக்களின் நிர்வாகங்களில் பெரும்பாலானவை, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கட்டுப்பாட்டில் இருப்பதுடன், அவரது ஆதரவாளர்களே பதவிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.