ஜனாதிபதித் தேர்தல் விடயத்தில் அவசரப்படவேண்டாம் என்றும் தேர்தலை பகிஷ்கரிப்போம் என்றும் பல கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், தமிழர் தரப்பினர் அனைவரும் ஒன்றிணைந்து தேர்தலின் சாதக பாதகங்களை ஆராய்ந்து நல்ல முடிவினை எடுப்பதே தமிழ்த் தேசிய இனத்திற்கு அனுகூலமாக அமையும் என்று ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் ஊடகப் பேச்சாளருமான சுரேஷ் க. பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் குறித்து அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையின் முழுவிபரம் வருமாறு:
இலங்கை தமிழ் மக்கள் மத்தியிலும் புலம்பெயர் தமிழ் மக்கள் மத்தியிலும் 2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள இலங்கையின் ஜனாதிபதித் தேர்தலில் ஒரு தமிழ் பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பாக கருத்தாடல்கள் நடைபெற்று வருகின்றது. சிங்கள தரப்பிடமிருந்தும்கூட அது தொடர்பான கருத்துகள் வெளிப்படுத்தப்பட்டு வருகின்றன. பெரும்பான்மையான தமிழ் அரசியல் கட்சிகளும் பொது அமைப்புகளும் பொது மக்களும் அவ்வாறான ஒரு பொது வேட்பாளரின் அவசியம் பற்றி பேசி வருகின்றார்கள். சில கட்சிகளும் சில அமைப்புகளும் மாறுபட்ட கருத்துகளையும் கொண்டிருக்கின்றன.
தமிழர் தரப்பைப் பொறுத்தவரையில், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியைச் சார்ந்த ஈபிஆர்எல்எவ், ரெலோ, புளொட், தமிழ்த் தேசியக் கட்சி மற்றும் ஜனநாயகப் போராளிகள் ஆகியோர் தமிழ் தரப்பிலிருந்து ஒரு பொது வேட்பாளரை நிறுத்துவதை ஏற்றுக்கொண்டிருப்பதுடன், திரு. விக்னேஸ்வரன் அவர்களும் அதற்குத் தமது சம்மதத்தைத் தெரிவித்திருக்கின்றார்.
இலங்கைத் தமிழரசுக் கட்சிக்குள் இது தொடர்பாக ஒருமித்த கருத்து இல்லாமல் தலைமைச் செயற்பாட்டாளர்களாக இருக்கின்றவர்கள் ஊடகங்களில் மாறுபட்ட கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசைச் சேர்ந்த திரு. கஜேந்திரகுமார் அவர்கள் இதனை நிராகரித்து ஜனாதிபதித் தேர்தலை பகிஷ்கரிக்க வேண்டும் என்ற கருத்தை முன்வைத்து வருகின்றார்.
கடந்த காலங்களில் ஜனாதிபதி வேட்பாளர்களுடன் சில பேச்சுவார்த்தைகள் நடைபெற்று அதற்கிணங்க தமிழ் மக்கள் வாக்களித்திருந்தாலும்கூட, பதவிக்கு வந்த ஜனாதிபதிகள் தாங்கள் அளித்த வாக்குறுதிகளை நடைமுறைப்படுத்தவில்லை என்பது உண்மையான நிலைப்பாடாகும். அதுமாத்திரமல்லாமல், யுத்தம் முடிந்து பதினான்கு வருடங்கள் கழிந்த பின்னரும் இலங்கையில் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த முதன்மையான பிரச்சினையாகத் திகழும் தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு ஆக்கபூர்வமான எத்தகைய நடவடிக்கைகளையும் இவர்கள் மேற்கொள்ளவில்லை.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவோம் என்று அறிவிக்கக்கூடிய திருவாளர்கள் ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாச, அனுரகுமார திசநாயக, பாட்டளி சம்பிக்க ரணவக்க ஆகியோரும் தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வாக எந்தவிதமான முன்மொழிவுகளையும் முன்வைக்கவில்லை.
ஆனால் அதே சமயம் ஜனாதிபதியாக வந்த ரணில் விக்ரமசிங்க அவர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளில் நான்கு அல்லது ஐந்துமுறை தமிழர் பிரதிநிதிகளைச் சந்தித்து கலந்துரையாடி பல உறுதிமொழிகளைக் கொடுத்தும் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. குறைந்தபட்சம் அரசியல் சாசனத்தில் இருக்கக்கூடிய பதின்மூன்றாவது திருத்தத்தை நிறைவேற்றுவதற்குக்கூட 2025ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலுக்கு பின்பு 2026இல் அதுபற்றி ஆலோசிக்கலாம் என்று கூறியுள்ளார்.
இந்த சூழ்நிலையில்தான் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து ஆலோசிக்க வேண்டியநிலை ஏற்பட்டுள்ளது.
இன்றைய அரசியல் சூழ்நிலையில் சிங்கள பெரும்பான்மை வாக்குகள் அதிகளவில் சிதறக்கூடிய நிலை தோன்றியுள்ளதால் எந்தவொரு வேட்பாளரும் தனித்து நின்று ஐம்பதுவீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றுக்கொள்வது கடினமாக இருக்கும். இத்தகைய பின்புலத்தில் தமிழ் மக்கள் ஒருமித்து ஒன்றாகச் செயற்பட்டு தமக்கு இருக்கக்கூடிய ஆறு இலட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குகளை ஒரு பேரம் பேசும் வாக்குகளாக மாற்றிக்கொள்வதற்கு முயற்சிசெய்வதன் மூலம் இவர்களிடமிருந்து சில உரிமைகளையாவது பெற்றுக்கொள்வதற்கு முயற்சிக்கலாம்.
தமிழ் தரப்பிலிருந்து ஒரு பொது வேட்பாளரை நிறுத்துவது என்ற கருத்தாடல்கள் சிங்கள அரசியல் கட்சிகள் மத்தியில் அரசியல் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. அவர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. இந்த சூழ்நிலையில் ஜனாதிபதித் தேர்தலை பகிஷ்கரிப்பது என்ற கருத்தை புறந்தள்ளுவதே தமிழர் தரப்பிற்கு நன்மைபயக்கும்.
சிங்கள தலைமைகள் யாரையும் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்ற விடயத்தை தெளிவுபடுத்தும் விதமாக தமிழ்ப்பொது வேட்பாளரை ஆதரிப்பதன் மூலம் உள்நாட்டிற்கும் சர்வதேச சமூகத்திற்கும் பல விடயங்களைச் சூசகமாகச் சொல்லமுடியும்.
இதுவரைகாலமும் தமிழ் அரசியல் தலைமைகள் சிங்கள தரப்புகள் அல்லது அரச தரப்பின் நிகழ்ச்சி நிரலுக்கு எதிராக எதிர்வினை ஆற்றிவந்துள்ளதே தவிர, தமிழர் தரப்பினரின் அபிலாசைகளுக்கு ஏற்றவாறு சிங்கள தலைமைகளை மாற்ற முடியவில்லை. ஆனால் இந்த ஜனாதிபதி தேர்தல் ஏற்படுத்திக் கொடுத்துள்ள சாதகமான சூழ்நிலையை, தமிழ் மக்கள் ஒன்றிணைந்து தமது உரிமைகளை வென்றெடுப்பதற்கான அனுகூலமான சூழலாக மாற்றியமைத்துக்கொள்ள வேண்டும் என்பதே எமது முக்கியமான வேண்டுகோளாகும்.
நாங்கள் ஒன்றுபட்டு தமிழ் மக்களின் வாக்குகளைச் சிதறாமல் கையாளுவதன் ஊடாக, சிங்கள ஜனாதிபதி வேட்பாளர்களை எமது நிகழ்ச்சிநிரலை நோக்கி வரவழைக்க முடியும். இதனை இப்பொழுதே நாங்கள் ஆரம்பிக்க வேண்டும். திரு. சம்பந்தன் அவர்கள் கூறுவது போன்று தேர்தல் அறிவிக்கும் வரையிலும் வேட்பாளர் அறிவிப்பு வெளியாகும்வரையிலும் காத்திருந்து கடைசி நிமிடத்தில் இதனைச் செய்ய முடியாது. இப்பொழுதிருக்கின்ற சூழ்நிலையில் தமிழரசுக் கட்சி முரண்பட்ட கருத்துகளைத் தெரிவிப்பதை விடுத்து, தீர்க்கமான சாகதமான முடிவினை எடுக்குமாக இருந்தால், தமிழ் மக்களின் பேரம்பேசும் சக்தியை ஓரளவிற்கேனும் வலுப்படுத்த முடியும்.
மேற்கண்ட விடயங்களுக்கும் அப்பால் ஜனாதிபதித் தேர்தலை தமிழ் மக்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துவது மேலும் பல சாதகமான விடயங்களையும் உள்ளடக்கியிருந்தாலும் அவை அனைத்தையும் இன்றைய சூழ்நிலையில் பொதுவெளியில் விவாதிக்க முடியாது. தமிழ் மக்களின் வாக்குகளை நாம் சிதறவிடாமல் ஒன்றுபட்டு பிரயோகிப்பதில் தீர்மானமாக இருந்தால் நாம் அனைவரும் கூடிப்பேசி இதனை இன்னமும் ஆரோக்கியமான முறையில் முன்னெடுக்க முடியும். அரசியல் ரீதியாகக் கிடைக்கும் சந்தர்ப்பங்களை நழுவவிடுவது புத்திகூர்மையாகாது.