‘உலகம் அழியப் போகிறது’… போதகரின் பேச்சை நம்பியதால் 7 தற்கொலைகளா?: இலங்கையை உலுக்கிய சம்பவம்!

Date:

உலகம் அழியப் போகிறது, இனி வாழ்ந்து பலனில்லையென பிரசங்கம் செய்த மத விரிவுரையாளரின் பேச்சினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.

இலங்கையில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.

யக்கல மற்றும் மஹரகமவில் விசம் அருந்தி உயிரிழந்ததாக கூறப்படும் இளம் ஆண் மற்றும் யுவதி ஒருவரின் சடலங்கள் செவ்வாய்க்கிழமை (2) பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதை தொடர்ந்து, சர்ச்சைக்குரிய உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.

2ஆம் திகதி தற்கொலை செய்தவர்கள், அண்மையில் ஹோமாகம, மகும்புர பகுதியில் தற்கொலை செய்து கொண்ட 46 வயதுடைய மத போதகர் மற்றும் தத்துவவாதி ஒருவரின் சீடர்கள் இருவரும் என தெரிவிக்கப்படுகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் இதேபோன்ற விஷத்தை பயன்படுத்தி இதேபோன்ற சந்தேகத்திற்கிடமான சூழ்நிலையில் தற்கொலை செய்து கொண்ட ஏழு மரணங்கள் தொடர்பான விசாரணைகள் குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் (சிஐடி) ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

பௌத்த மத போதகர், தத்துவவாதியென கூறப்பட்ட ருவான் பிரசன்ன குணரத்ன என்ற 46 வயதுடைய நபர் சயனைட் உட்கொண்டு அண்மையில் உயிரிழந்ததுடன், ஹோமாகமவில் வசித்து வந்த அவரது மனைவி, இரண்டு மகன்கள் மற்றும் மகள் ஆகியோரும் விஷம் குடித்து அண்மையில் உயிரிழந்தனர்.

ருவான் பிரசன்ன மகும்புர பிரதேசத்தில் தற்காலிகமாக வசிப்பவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது

இவர் பௌத்த மத போதகர் என்பதும், நாடு முழுவதும் ஏராளமான சீடர்கள் இருப்பதும் தெரியவந்துள்ளதாகவும், டிசம்பர் 26ம் திகதி தனது சீடர்களை வரவழைத்து இந்த நாடு அழிந்து வருவதாகவும், இனி இங்கு வாழ்வதில் எந்த பயனும் இல்லை என்றும் பிரசாரம் செய்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.

பின்னர் அவர் விசம் அருந்தி தற்கொலை செய்தார்.

கடந்த 30ஆம் திகதி இரவு அவரது மனைவியும், 3 பிள்ளைகளும் மாலம்பேயில் தங்கியிருந்த வீட்டில் தற்கொலை செய்து கொண்டனர். இவர்களும் விசம் அருந்தியுள்ளனர்.

மகும்புர கொட்டாவ பகுதியைச் சேர்ந்த உதாரி நிசன்சலா சேனாரத்ன (35), மூத்த மகன் ஆதித்ய பிரதாப குணரத்ன (09), இரண்டாவது மகன் ஆர்ய பிரதாப குணரத்ன (08) மற்றும் இளைய மகள் ஆராத்யா பிரபவி குணரத்ன (06) ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.

வெளிநாட்டுக்கு செல்வதற்காக பொலன்னறுவையில் உள்ள சொத்துக்களை விற்றுவிட்டு ஹோமாகம மகும்புர பிரதேசத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்த குடும்பம் வெளிநாட்டுக்கு செல்வது தொடர்பான வேலை முடியும் வரையில் தந்தை சயனைட் போன்ற விசம் உட்கொண்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதை தொடரந்து, அவரது சீடர்களான இளைஞரும், யுவதியும் விசம் அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

உயிரிழந்தவர்களும், மத விரிவுரையாளரின் இறுதிக்கிரியைகள் இடம்பெற்ற வீட்டில் தங்கி இறுதிச் சடங்கில் கலந்துகொண்டுள்ளனர்.

அம்பலாங்கொட, திவோல்புர பிரதேசத்தில் வசிப்பவர் என அடையாளம் காணப்பட்ட 34 வயதுடைய ஆணின் சடலம், அவர் தற்காலிகமாக தங்கியிருந்த மஹரகம, பழைய வீதியில் அமைந்துள்ள விருந்தினர் விடுதியொன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

விருந்தினர் விடுதிக்கு வந்து மதியம் தங்கியிருந்து பின்னர் மாலை ஆறு மணியளவில் செல்வதாக நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஆனால் இரவு ஏழு மணி ஆகியும் அவர் வெளியே வராததால், ஊழியர்கள் நடத்திய சோதனையில் அந்த இளைஞன் தனது அறையில் படுக்கையில் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். சம்பவம் தொடர்பில் மஹரகம பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து பொலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்ததையடுத்து குறித்த இளைஞன் கடும் விசத்தை அருந்தி தற்கொலை செய்து கொண்டமை தெரியவந்துள்ளது.

பல்கலைக்கழகத்துக்கு தகுதி பெற்ற மாணவியான 21 வயதுடைய தினிதி மந்தாகினி என்ற யுவதியின் சடலம் ரஃபல் வத்த, யக்கல பிரதேசத்தில் உள்ள அவரது இல்லத்தில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஒரே நாளில் இருவேறு இடங்களில் ஒரே நேரத்தில் தற்கொலை செய்து கொண்ட யக்கல ரஃபல் வத்த பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய யுவதியும், அம்பலாங்கொட திவோல்புர பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய இளைஞனும் காதலர்கள் என தகவல் கிடைத்துள்ளது.

ஏழு மரணங்களும் ஒரே மாதிரியான வீரியமான விசத்தை உட்கொண்டதன் விளைவாக ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். தற்கொலை செய்து கொண்ட போதகரின் பிரசங்கம் தான் தொடர் தற்கொலை சம்பவங்களுக்கு காரணமா என்பது குறித்து விசாரணை நடந்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

இந்த போதகரின் பிரசங்கங்களை கேட்டு அந்த மத போதனைகளுக்கு அடிமையானவர்கள் வேறு இருக்கிறார்களா என்பது குறித்தும் விசேட அவதானத்துடன் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

நீதிக்கான ஓலம் – சர்வதேச விசாரணையை வலியுறுத்தி ஒன்றிணையும் தமிழர் தரப்பு

கடந்த காலங்களில் இடம்பெற்ற படுகொலைகள், காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் மற்றும் ஏனைய...

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை அவமதித்ததாக குற்றச்சாட்டு – போராட்டத்திற்கு அழைப்பு

அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவையை களங்கப்படுத்தும் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபடும் அரச அதிகாரிகளுக்கு...

நீதியின் ஓலம் போராட்டத்திற்கு அனுமதியளித்த வலி கிழக்கு தவிசாளரிடம் பொலிஸ் தரப்பு விளக்கம் கோரியது

யாழ். செம்மணிப்பகுதியில் இடம்பெறும் நீதியின் ஓலம் 2 போராட்டம்  இனங்களுக்கிடையே அமைதியற்ற,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்