சிரியாவில் திங்களன்று இஸ்ரேலிய தாக்குதலில் ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவலர் படையின் (IRGC) மூத்த தளபதிகளில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
இதற்கான பதிலடி கொடுக்கப்படும் என்றும், தாக்குதலுக்கான விலையை இஸ்ரேல் செலுத்தும் என்றும் ஈரான் அறிவித்துள்ளது.
“சிரியாவில் மூத்த IRGC ஆலோசகரான பிரிக்கேடியர் ஜெனரல் செயத் ராஸி மௌசவி, டமாஸ்கஸில் இஸ்ரேலிய ஏவுகணை தாக்குதலில் கொல்லப்பட்டார்“ என ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவலர் படையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் இந்த குற்றத்திற்கு சந்தேகத்திற்கு இடமின்றி விலை செலுத்தும்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, மௌசவியின் கொலை இஸ்ரேலின் “விரக்தி, மற்றும் இயலாமையின்” அடையாளம் என்று கூறினார், “இந்த குற்றத்திற்கு இஸ்ரேல் நிச்சயமாக விலை செலுத்தும்” என்றும் கூறினார்.
“சிரியாவில் எதிர்ப்பின் அச்சுக்கு தளவாட ஆதரவை” வழங்குவதற்கு ராஸி மௌசவி பொறுப்பேற்றார் என IRGC அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்ப்பின் அச்சு என்பது, பாலஸ்தீனிய குழு ஹமாஸ், லெபனானின் ஹெஸ்பொல்லா, மற்றும் யேமனில் உள்ள ஹூதிகள், ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள பல்வேறு போராளிகள் உட்பட ஈரானால் ஆதரிக்கப்படும் பிராந்திய போராளி குழுக்களின் வலையமைப்பைக் குறிப்பிடுகிறது.
IRGC இன் வெளிநாட்டு நடவடிக்கைப் பிரிவான குட்ஸ் படையின் முன்னாள் தலைவர் IRGC தளபதி காசிம் சுலைமானி 2020 இல் ஈராக்கில், அமெரிக்கா நடத்திய விமானத்தாக்குதலில் கொல்லப்பட்டார். சுலைமானியின் “தோழர்” மௌசவி என்று அந்த அறிக்கை மேலும் கூறியது.
ஈரானிய அரசு செய்தி நிறுவனமான IRNA, குத்ஸ் படையின் மிகவும் அனுபவம் வாய்ந்த ஆலோசகர்களில் ஒருவராக மௌசவியை விவரித்தது. டமாஸ்கஸுக்கு தெற்கே சயீதா ஜெய்னாப் என்ற இடத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் அவர் கொல்லப்பட்டதாக அதில் கூறப்பட்டுள்ளது.
சமீபத்திய ஆண்டுகளில், இஸ்ரேல் ஈரானிய ஆதரவு குழுக்கள் மற்றும் சிரியாவில் உள்ள சிரிய இராணுவப் படைகளுக்கு எதிராக நூற்றுக்கணக்கான வான்வழித் தாக்குதல்களை நடத்தியது.
ஜனாதிபதி பஷர் அல்-அசாத்தின் உறுதியான நட்பு நாடான ஈரான், 2011 ஆம் ஆண்டு தொடக்கம் சிரிய மோதலில் முக்கிய பங்கைக் கொண்டுள்ளது, சிரிய ஆட்சிக்கு ஆதரவாக ஆயிரக்கணக்கான ஈரானிய மற்றும் வெளிநாட்டு போராளிகளை அனுப்பியுள்ளது.
காசா பகுதியை ஆளும் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே நடந்து வரும் போருக்கு மத்தியில் சிரியாவில் மௌசவியின் மரணம் வந்துள்ளது.
ஒக்டோபர் 7 தாக்குதல்களுக்கு பதிலடியாக ஹமாஸை அழிப்பதாக இஸ்ரேல் சபதம் செய்துள்ளது. இத்தாக்குதல்களில் சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டனர், பெரும்பாலும் பொதுமக்கள், சுமார் 240 பேர் பணயக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டதாக இஸ்ரேலிய அதிகாரிகள் கூறுகின்றனர்.
பாலஸ்தீன பிரதேசத்தில் உள்ள சுகாதார அதிகாரிகளின் கூற்றுப்படி, இஸ்ரேலின் வான் மற்றும் தரைத் தாக்குதலில் காஸாவில் 20,000 க்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
ஹமாஸுக்கு நிதி மற்றும் இராணுவ ஆதரவின் முக்கிய ஆதாரமான ஈரான், ஒக்டோபர் 7 தாக்குதல்களைப் பாராட்டியது, அதே நேரத்தில் அதன் திட்டமிடல் அல்லது செயல்படுத்துவதில் எந்த தொடர்பும் இல்லையென்றது.
தெஹ்ரான் இஸ்ரேலை அங்கீகரிக்க மறுக்கிறது. 1979 இஸ்லாமியப் புரட்சிக்குப் பின்னர் அதன் வெளியுறவுக் கொள்கையின் அடிப்படைக் கூறுகளில் பாலஸ்தீனத்திற்கான ஆதரவை உருவாக்கியுள்ளது.