யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்துக்குள் அனுமதியின்றி ஒன்றுகூடி பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட 2 இளைஞர்களை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த பிறந்தநாள் நிகழ்வில் பங்கேற்ற ஏனையவர்களையும் கைது செய்து நீதிமன்றத்தில் முற்படுத்துமாறு பொலிசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம், முழவை சந்தியை சேர்ந்த இளைஞர்கள் இருவரே கைது செய்யப்பட்டுள்ளனர்.
2 நாட்களின் முன்னர், இளைஞன் ஒருவரின் 33வது பிறந்தநாள் நிகழ்வு, யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் கொண்டாடப்பட்டுள்ளது. அந்த பகுதியில் பழ வியாபாரத்தில் ஈடுபடும் இளைஞர்கள் பலரும் அதில் பங்கேற்றுள்ளனர்.
மத்திய பேருந்து நிலையத்துக்குள் நுழைந்த இந்த கும்பல் பிறந்தநாள் கொண்டாட்டத்துக்கு இடையூறாக இருப்பதாக குறிப்பிட்டு, பேருந்துகளையும் அப்புறப்படுத்துமாறு மிரட்டியுள்ளனர்.
பிறந்தநாள் கொண்டாட்டம் தொடர்பான வீடியோக்கள் ரிக்ரொக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வைரலாகியது.
பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் விதமாக ஒன்றுகூடியமை, சட்டவிரேதமாக கூட்டம் கூடியமை ஆகிய குற்றச்சாட்டில் இரண்டு இளைஞர்களை கைது செய்ய யாழ்ப்பாணம் பொலிசார், இன்று அவர்களை நீதிமன்றத்தில் முற்படுத்தினர்.
அவர்கள் இருவரையும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.
இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பங்கேற்ற ஏனையவர்களையும் கைது செய்து நீதிமன்றத்தில் முற்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
அந்த இடத்தில் தினமும் சட்டவிரோத ஒன்றுகூடல் நடப்பதாக சுட்டிக்காட்டிய நீதிபதி, பொலிசார் தமது கடமையை செய்வதில்லையென்றும் கண்டித்தார்.
பிறந்தநாளுக்குரிய நபர் மத்திய பேருந்து நிலைய பகுதியில் பழக்கடை நடத்தி வருகிறார். அவரது சில செயற்பாடுகளால் ஆத்திரமடைந்த சிலர், சில நாட்களின் முன்னர் அந்த கடையை சிலர் உடைத்திருந்தனர்.
குறிப்பிட்ட நபரின் பிறந்தநாளுக்கு மறுநாளே பேருந்து நிலையத்தில் கேக் வெட்டப்பட்டது. அன்று மருதனார்மடம், யாழ் மத்திய பேருந்து நிலையம் மற்றும் முழவை சந்தியில் 2 இடங்கள் என- 4 இடங்களில் கேக் வெட்டப்பட்டுள்ளது.
அத்துடன், பிரான்சிலும் அவரது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். முன்னர் யாழ் நகரில் இயங்கிய வாள்வெட்டு குழுவொன்று தற்போது தப்பியோடி, பிரான்சில் வாழ்கிறது. அதனுடன் தொடர்புடையவர்களே அங்கு கேக் வெட்டி கொண்டாடினர்.
யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் கேக் வெட்டிய கொண்டாட்டத்தில் பங்கேற்றவர்களும், கணிசமான முன்னாள் வாள்வெட்டு குழுவினர் என கூறப்படுகிறது.