Pagetamil
இலங்கை

‘யுத்தம் முடிந்ததால் என்னால் வடக்கு, கிழக்கிற்கு போய்வர முடிகிறது… பிரபாவை சந்தித்ததேயில்லை’: முத்தையா முரளிதரன்!

“வாருங்கள்… வாருங்கள்“ என வாஞ்சையோடு அழைத்து சோபாவில் அமர வைத்தார் முத்தையா முரளிதரன். அசகாய பேட்ஸ்மேன்களை அசால்ட்டாக வீழ்த்தியவரின் முகத்தில் இப்போது புதிதாக ஒரு பரபரப்பு இருப்பதைக் காண முடிந்தது. காரணம், ‘800′ திரைப்படம். முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை முழுமையாகப் பதிவு செய்யும் பயோபிக் இது. படத்தின் விளம்பர நிகழ்வுகளுக்காக சென்னை வந்திருந்தவரை தனியாக சந்தித்து உரையாடும் வாய்ப்பு கிடைத்தது.

‘‘வெங்கட் பிரபுவும் என் மனைவியும் சிறுவயது நண்பர்கள். ஒருநாள் என் வீட்டிற்கு வெங்கட் பிரபு வந்திருந்தார். அதுதான் இந்தப் படத்தின் தொடக்கப்புள்ளி’’ என ‘800′ திரைப்படம் தொடங்கப்பட்ட கதையை விவரிக்க ஆரம்பித்தார் முரளிதரன்.

‘‘1995 காலகட்டத்துல இலங்கையில நிறைய பிரச்னைகள் நடந்துக்கிட்டு இருந்துச்சு. அந்தச் சமயத்துலதான் நானும் இலங்கை அணிக்காக ஆடிக்கிட்டிருந்தேன். எல்லா மக்களும் எந்த வேறுபாடும் இல்லாமல் என்னை ஆதரித்தார்கள். இலங்கை மக்களுக்காக எதாவது செய்ய வேண்டும் என நினைத்தேன். சிலருடன் இணைந்து ‘நற்குண மன்றம்’ என்கிற அமைப்பைத் தொடங்கி மக்களுக்குத் தேவையான வாழ்வாதார உதவிகளைச் செய்துவருகிறேன். சுனாமி வந்த போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு 1,000 வீடுகளை எங்கள் அமைப்பு மூலம் கட்டிக்கொடுத்தோம். நாடு முழுவதும் உதவி மையங்களை அமைத்து இயன்றவற்றை செய்துவருகிறோம்.

வெங்கட் பிரபு என் வாழ்க்கை வரலாற்றைப் படமாக்க வேண்டும் என அணுகியபோது எனக்கு அதில் பெரிதாக உடன்பாடில்லை. ஆனால், இந்தப் படத்தின் மூலம் வரும் வருவாயை நற்குண மன்றத்திற்குப் பயன்படுத்தலாம் என உடனிருந்தவர்கள் சொன்னார்கள். அதனால் மட்டுமே ஒப்புக்கொண்டேன். ‘என் பெருமையைப் பேசும் படமாக இல்லாமல் உண்மையைப் பேசும் படமாக இருக்க வேண்டும்’ என்றேன். வெங்கட் பிரபுவின் உதவி இயக்குநர் ஸ்ரீபதியே நிறைய ஆய்வு செய்து எனக்கே தெரியாத பல சம்பவங்களுடன் கதை எழுதி வந்தார். இப்படித்தான் ‘800′ தொடங்கியது.’’

‘‘2009 க்கு முந்தைய இலங்கை… 2009 க்குப் பிறகான இலங்கை… எப்படியிருக்கிறது மாற்றம்?’’

‘‘இலங்கையின் பிரச்னை என்பது நான் பிறப்பதற்கு முன்பாகவே தொடங்கிவிட்டது. 1956இல் தொடங்கிய பிரச்னை 1983இல் பெரிய கலவரமாக வெடித்தது. என் அப்பா ஒரு பிஸ்கட் கம்பெனிதான் நடத்திக்கொண்டிருந்தார். எங்களின் ஏஜெண்டுகள் தமிழர்கள் வாழும் பல பகுதிகளிலும் இருந்தார்கள். ஆக, யாழ்ப்பாணத்திலும் எனக்கு நிறைய நண்பர்கள் உண்டு. அங்கே அவர்களின் வீட்டிலேயே பல நாள்கள் விளையாடித் திரிந்ததெல்லாம் இன்னும் ஞாபகம் இருக்கிறது. ஆனால், மோதல்கள் பெரிதாகப் பெரிதாக எங்களால் அங்கே செல்ல முடியவில்லை. நாங்கள் கண்டியில் வசித்தோம். யாழ்ப்பாணம் எப்போதுமே யுத்தக்களமாகத்தான் இருக்கும். அங்கே இலங்கை ராணுவத்தின் மீது ஏதாவது தாக்குதல்கள் நடந்தால், பதிலுக்கு கண்டியில் வாழும் எங்கள்மீது தாக்குதல் நடக்கும். நாங்கள் அடி வாங்குவோம். அது ஒரு பயங்கரமான சூழலாகத்தான் இருந்தது. ஆனால், என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். 2009 யுத்தத்துக்குப் பிறகு இந்தத் தமிழர் – சிங்களர் பிரச்னையால் ஒரு உயிரைக்கூட இழக்கவில்லை. 2019இல் ஒரு வெடிகுண்டு விபத்து நிகழ்ந்தது. ஆனால், அதற்கான காரணங்கள் வேறு. என்னால் இப்போது கிளிநொச்சி, ஓமந்தை உட்பட பல வடகிழக்குப் பகுதிகளுக்கும் செல்ல முடிகிறது. எங்களுடைய மையங்களும் அங்கே இருக்கின்றன. மக்கள் இயல்பாகிவிட்டார்கள். நலமாக இருக்கிறார்கள். அரசியல்வாதிகளைப் பற்றி எனக்குத் தெரியாது.’’

‘‘நீங்கள் போராளிக்குழுத் தலைவர் ஒருவரை சந்திப்பதைப் போல படத்தில் காட்சியிருக்கிறது. அவர் பிரபாகரன்தானே?’’

‘‘அவர் பிரபாகரன் இல்லை. அந்த நடிகரின் சாயல் மற்றும் காட்சியின் சூழலால் உங்களுக்கு அப்படித் தோன்றியிருக்கலாம். நான் பிரபாகரனை சந்தித்ததே இல்லை. ஆனால், அவர் குழுவினரையும் அவருக்கு அடுத்தகட்டத்தில் இருப்பவர்களையும் சந்தித்திருக்கிறேன். அதுதான் நீங்கள் சொல்லும் அந்தக் காட்சி. 2002 சமயத்தில் ஐக்கிய நாடுகள் கூட்டமைப்பின் தூதுவராக இருந்தேன். அந்தச் சமயத்தில் வடகிழக்குப் பகுதிகளுக்குச் சென்று பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. சுனாமியின் போது இலங்கையின் மற்ற பகுதிகளுக்குக் கிடைத்த உதவிகள், ஈழத்தமிழர்கள் வாழும் பகுதிகளுக்குக் கிடைக்கவில்லை. அந்தச் சமயத்தில் அரசுக்கும் போராளிகளுக்கும் ஒரு அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகியிருந்தது. அதனால், தமிழர்கள் வாழும் பகுதிகளுக்கு என்னால் உதவிகளைக் கொண்டு சேர்க்க முடிந்தது. அந்தச் சமயத்தில் இரண்டு மூன்று முறை கிளிநொச்சியில் உள்ள விடுதலைப் புலிகளின் தலைமையகத்திற்கு ஐக்கிய நாடுகள் கூட்டமைப்பின் நிர்வாகிகளோடு சென்றிருக்கிறேன். நான் சென்ற சமயங்களில் பிரபாகரன் அங்கில்லை. மற்றவர்களுடன்தான் உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. இந்த யுத்தத்தைப் பற்றி, பிரச்னைகளைப் பற்றித் தெரிந்துகொள்ள எனக்கும் சில கேள்விகள் இருந்தன. அதையெல்லாம் அவர்களிடம் கேட்டேன். டிரெய்லரில் நீங்கள் பார்த்த காட்சி அதுதான்.’’

‘‘முதலில் விஜய் சேதுபதி இந்தப் படத்தில் நடிப்பதாக இருந்ததே?’’

‘‘ஆம், முதலில் விஜய் சேதுபதிதான் என் கதாபாத்திரத்தில் நடிப்பதாக இருந்தார். ஆனால், படம் தொடங்குவதற்கு முன்பாகவே ஏகப்பட்ட சர்ச்சைகள். விஜய் சேதுபதி மிகச்சிறந்த நடிகர். தமிழ்நாட்டிற்கே பெருமை தேடித் தந்து கொண்டிருக்கிறார். அப்படியானவர் எந்தப் பிரச்னைக்கும் சிரமத்துக்கும் உள்ளாவதில் எனக்கு உடன்பாடில்லை. அதனால் நானே அவரைப் படத்திலிருந்து விலகிக்கொள்ளச் சொல்லிவிட்டேன். விஜய் சேதுபதிக்கு பதிலாக மாதுர் மிட்டல் என்னுடைய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இதுவரை மொத்தமாகவே மூன்று முறைதான் அவரைச் சந்தித்திருப்பேன். ‘பதற்றப்படாதீங்க. என்னைப் போன்றே அப்படியே இமிடேட் செய்ய வேண்டும் என நினைக்காதீர்கள். இயக்குநர் சொல்வதைக் கேட்டு உங்களின் திறமையை வெளிக்காட்டுங்கள்’ என்றேன். அவ்வளவுதான், படக்குழுவே எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டார்கள். மிட்டல் அருமையாகச் செய்திருக்கிறார்.’’

“உங்கள் குறுந்தாடியின் ரகசியம் என்ன?’’

‘‘எனக்கு 51 வயதாகிறது. இந்தத் தாடியை எடுத்துவிட்டால் சின்னப் பையனைப் போல இருப்பேன். என்னைக் கொஞ்சம் முதிர்ச்சியாகவும் பக்குவமாகவும் வெளிக்காட்டிக்கொள்ள வேண்டிய தேவை இருக்கிறது. அதற்காகத்தான் இந்தக் குறுந்தாடி. கிரிக்கெட் ஆடும்போதும் அப்படித்தான். நான் கொஞ்சம் மென்மையானவன். ஆனால், பந்துவீச்சாலர்கள் ஆக்ரோஷமாக இருந்தால் நன்றாக இருக்கும். என்னை ஆக்ரோஷமாகவும் துடிப்பாகவும் காட்டிக் கொள்ளத்தான் இந்த ஸ்டைலில் தாடி வைத்தேன். கடைசியில் அதுவே என் அடையாளமாக மாறி விட்டது.’’

‘‘அவுஸ்திரேலிய சுழல் ஜாம்பவான் ஷேன் வோர்னின் மறைவு யாரும் எதிர்பார்க்காதது. உங்களின் சமகால வீரரான அவரைப் பற்றி?’’

‘‘அவரின் மரணம் எனக்கும் அதிர்ச்சி தந்தது. விளையாட்டு வீரர்கள் என்றால் எப்போதுமே ஃபிட்டாக ஆரோக்கியமாக இருப்பார்கள் என நினைக்கிறீர்கள். அதில் உண்மையில்லை. எவ்வளவு ஃபிட்டாக இருந்தாலும், மரபணு வழி வரும் பாதிப்புகளைத் தவிர்க்க முடியாது. ஜயசூர்யா இதயத்தில் மூன்று ஸ்டென்ட் வைத்திருக்கிறார். அவரைப் பார்த்து பயந்து போய் நானும் கொலஸ்ட்ராலுக்காக மருந்துகள் சாப்பிட்டேன். ஆனால், பலனில்லை. ஒன்றரை வருடத்திற்கு முன் நானும் மூன்று ஸ்டென்ட் வைத்திருக்கிறேன். மஹேல ஜயவர்த்தனவும் கொலஸ்ட்ராலுக்கு சிகிச்சை எடுத்துவருகிறார். ஆக, விளையாட்டு வீரரோ இல்லையோ, 40 வயதைத் தாண்டிவிட்டீர்கள் எனில் மருத்துவ ஆலோசனைகளை எடுத்துக்கொண்டு ஜாக்கிரதையாக இருப்பது நல்லது.’’

‘‘உலகக்கோப்பை நெருங்கவிட்டது. யார் வெல்வார்கள் என நினைக்கிறீர்கள்?’’

‘‘உலகக்கோப்பை எப்போதுமே பெரிய விஷயம்தான். 1996இல் இலங்கை உலகக் கோப்பையை வென்ற மகிழ்ச்சியை வார்த்தைகளில் விளக்க முடியாது. அந்த வெற்றிதான் எங்கள் நாட்டுக்கே தனிப்பெருமையைத் தேடிக்கொடுத்தது. உலகக்கோப்பையை வெல்ல நல்ல அணியோடு கொஞ்சம் அதிர்ஷ்டமும் வேண்டும். 2011இல் அந்த அதிர்ஷ்டம் இந்தியா பக்கம் இருந்தது. வரும் உலகக்கோப்பையிலும் 100 கோடி மக்களின் பிரார்த்தனையும் விருப்பமும் இந்திய அணிக்குப் பக்கபலமாக இருக்கும் என்பதால் அவர்கள் வெல்லவே வாய்ப்பு அதிகம். இலங்கையும் நல்ல அணிதான். ஆனால், இப்போது கொஞ்சம் தடுமாற்றத்தில் இருக்கிறார்கள். அதனால் கொஞ்சம் சந்தேகமாக இருக்கிறது. 1996இலும் இப்படித்தான் இருந்தோம். ஆனாலும் உலகக்கோப்பையை வென்றோம். என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.’’

“‘தமிழனும் இல்லை, சிங்களனும் இல்லை. நான் ஒரு கிரிக்கெட்டர்’ என்ற வசனம் படத்தில் இருக்கிறதே, அதுதான் உங்களின் நிலைப்பாடா?’’

‘‘ஆம், அது உண்மைதானே. அதுதான் என்னோட எண்ணம். நான் அப்படித்தான் அறியப்படணும்.’’

-விகடன்-

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

இ-டிக்கெட் மோசடி- பொலிஸ் அதிகாரி சேவையிலிருந்து இடைநிறுத்தம்

east tamil

கிளிநொச்சி நீர் சுத்திகரிப்பு பணிகளை பார்வையிட்ட அமைச்சர்

Pagetamil

யாழில் அரசியல் பிரமுகர்களை சந்தித்த இந்திய தூதர்

Pagetamil

சுண்டிக்குளத்தில் கடற்படையினரால் மர்ம பொருள் மீட்பு

east tamil

கட்டைக்காட்டு பகுதியில் புதிதாக போடப்பட்ட 15 மின் விளக்குகள்

east tamil

Leave a Comment