ராஜஸ்தானின் பிரதாப்கர் மாவட்டம், தாரியாவாட் பகுதியை சேர்ந்தவர் கன்ஹா காமேதி. பழங்குடி இனத்தை சேர்ந்த இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பழங்குடி பெண்ணுக்கும் ஓராண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. சில மாதங்களுக்குப் பிறகு கருத்து வேறுபாடு காரணமாக அந்த பெண், கணவரை பிரித்து தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார்.
பின்னர் அந்த பெண்ணுக்கும் மற்றொரு இளைஞருக்கும் இடையே நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது. ராஜஸ்தான் பழங்குடி சமூகத்தின் பாரம்பரிய வழக்கத்தின்படி திருமணமான பெண், கணவரை பிரிந்து தனது விருப்பப்படி மற்றொருவரை திருமணம் செய்து கொள்ள முடியும்.
இந்த பாரம்பரிய வழக்கத்தின்படி, கடந்த சில நாட்களுக்கு முன்பு பழங்குடி பெண் தனக்கு விருப்பமான இளைஞரை திருமணம் செய்து கொண்டார். தற்போது அந்த பெண் 6 மாத கர்ப்பிணியாக உள்ளார். தனது மனைவி மறுமணம் செய்து கொண்ட தகவல் கடந்த 30ஆம் திகதி கன்ஹா காமேதிக்கு தெரிய வந்தது. அன்றைய தினம் அவரும் அவரது குடும்பத்தினரும் பெண்ணின் வீட்டுக்கு சென்று அவரை வலுக்கட்டாயமாக மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு கன்ஹா அழைத்து வந்தார்.
பின்னர் தனது உறவினர்கள் முன்னிலையில், மனைவியின் ஆடைகளைக் களைந்து, சுமார் ஒரு கி.மீ. தொலைவுக்கு தெரு தெருவாக ஊர்வலமாக இழுத்துச் சென்றார். அந்த பெண் கூக்குரலிட்டும் யாரும் காப்பாற்றவில்லை. கன்ஹாவின் உறவினர்கள், பழங்குடி பெண்ணை செல்போனில் வீடியோ எடுத்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.
In dhariabad Pratapgarh Rajasthan
very shameful a tribal girl stripped naked #Justice_for_pariyanka #गहलोत_सरकार_शर्म_करो, #बेरोजगार_मांगे_REET_परीक्षा #INDvPAKPakistan, #AsiaCup2023 #VijayalakshmiC IND vs PAK #AsiaCup2023 pic.twitter.com/BHoxP5lGe5— Tahsin Bhat (@Faiezabhat_86) September 2, 2023
ராஜஸ்தானில் தற்போது முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகிறது. இந்நிலையில், குற்றவாளிகளை கைது செய்ய 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. பெண்ணின் கணவர் கன்ஹா காமேதி உட்பட 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். மேலும் 11 பேரை தேடி வருகின்றனர்.
முதல்வர் அசோக் கெலாட் நேற்று பிரதாப்கர் பகுதிக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட பழங்குடி பெண், அவரது உறவினர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். இது குறித்து அவர் கூறும்போது, “தவறிழைத்தவர்கள் கைது செய்யப்படுவார்கள். பழங்குடி பெண்ணுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு, அரசு வேலை வழங்கப்படும்’’ என்று உறுதி அளித்தார்.