சண்முகபாண்டியன் நடிக்கும் புதிய படத்துக்கு ‘படைத் தலைவன்’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது. மேலும், சிறிய கிளிம்ப்ஸ் வீடியோவையும் படக்குழு வெளியிட்டுள்ளது.
நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்தின் இளைய மகன் சண்முகபாண்டியன் நடிப்பில் உருவாகி வரும் படத்துக்கு ‘படைத் தலைவன்’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது. ’வால்டர்’, ‘ரேக்ளா’ ஆகிய படங்களை இயக்கிய யு.அன்பு இப்படத்தை இயக்குகிறார். இளையராஜா இசையமைக்கிறார். ’நட்பே துணை’ படத்தின் இயக்குநர் பார்த்திபன் தேசிங்கு இப்படத்துக்கு திரைக்கதை – வசனம் எழுதுகிறார்.
இந்த நிலையில், விஜயகாந்த் பிறந்தநாளான இன்று ‘படைத் தலைவன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழு வெளியிட்டுள்ளது. அத்துடன் படத் தலைப்பை அறிவிக்கும் விதமாக ஒரு சிறிய கிளிம்ப்ஸ் வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது. இதனை விஜயகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
காட்டு யானைகளின் வாழ்வியல் பின்னணியில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களுக்கு முன்பு பூஜையுடன் தொடங்கியது. இப்படத்தின் படப்பிடிப்பு கேரள காடுகளில் நடைபெற்று வந்தது. தொடர்ந்து ஒடிசா, தாய்லாந்து உள்ளிட்ட பகுதிகளில் உள்ள காடுகளில் படப்பிடிப்பு நடத்தவும் படக்குழு திட்டமிட்டுள்ளது. இதில் கஸ்தூரி ராஜா, எம்.எஸ்.பாஸ்கர், யாமினி சந்தர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.