அடைந்தால் மகாதேவி… இல்லையேல் மரணதேவி: மோடியிடம் தமிழீழம் கேட்க தயாராகிறதா தமிழ் அரசு கட்சி?

Date:

இந்தியா வரும் ரணில் விக்கிரமசிங்கவிடம், இலங்கைத் தமிழர்களிற்கு அதியுச்ச அதிகார பகிர்வை வழங்குமாறு வலியுறுத்தவுள்ள இலங்கை தமிழ் அரசு கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

தமிழ் மக்கள் வெளியக சுயநிர்ணய அடிப்படையில், விரும்பினால் பிரிந்து செல்லும் அம்சங்களை கொண்ட, உச்சபட்ச சமஸ்டி அடிப்படையிலான தீர்வை வழங்குமாறு கோரவுள்ளதாக தமிழ் அரசு கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

தற்போதைய சூழலில் முற்றிலும் சாத்தியமேயில்லாத, இந்த உசுப்பேற்றல் பாணி கோரிக்கையை தமிழ் அரசு கட்சி முன்வைப்பதன் பின்ணியில், கட்சிகளுக்கிடையிலான தேர்தல் அரசியல் போட்டியே இருக்கிறது.

13வது திருத்தத்தை உடனடியாக அமுல்ப்படுத்துமாறு இலங்கையை வலியுறுத்தும்படி, இந்திய பிரதமர் நரேந்தர மோடியை கோருவதென்ற தமிழ் ஈழ விடுதலை இயக்கம் தீர்மானித்து, கடந்த வருடம் கடிதமொன்று அனுப்பப்பட்டது.

இந்த கடிதத்தில் இலங்கை தமிழ் அரசு கட்சியும் கையொப்பமிட்டிருந்தது. அந்த சமயத்தில்- இலங்கை  தமிழ் அரசு கட்சி கையொப்பமிட விரும்பாமல் இழுத்தடித்து வந்தது. இரா.சம்பந்தனை முன்னிறுத்தி, கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரே இந்த தடைகளை ஏற்படுத்தி வந்தார். எவ்வாறாயினும், அந்த முயற்சி நல்ல நகர்வு என கருதிய மாவை சேனாதிராசா, கடிதத்தில் கையொப்பமிட விரும்பியதால், அதனை கட்சிக்குள்ளருந்த சில தரப்புக்களால் தடுக்க முடியவில்லை.

இந்த கடிதம் அனுப்புவதற்கு முன்னதாக, தமிழ் கட்சிகள் கூடி கலந்துரையாடல்களையும் நடத்தியிருந்தன. அந்த சந்திப்புக்கள் எல்லாம், 13வது திருத்தத்தை முழுமையாக அமுல்ப்படுத்தக் கோருவதென்ற தலைப்பின் கீழேயே இடம்பெற்றன.

அந்த சமயத்தில் தமிழ்பக்கத்துடன் பேசிய, இலங்கை தமிழ் அரசு கட்சியின் முடிவெடுக்கவல்ல மூத்த தலைவர் ஒருவர்- “இவை ரெலோ யார்… நேற்று வந்தவர்கள். நாங்கள் எவ்வளவு பழைய கட்சி. அவர்களின் வரைபில் நாங்கள் கையொப்பமிடுவது மரியாதை குறைவானது“ என குறிப்பிட்டிருந்தார்.

இதே இழுபறி, தற்போது மீண்டும் ஏற்பட்டுள்ளது.

ரணில் விக்கிரமசிங்க இந்தியா செல்லும் போது, உடனடியாக 13வது திருத்தத்தை முழுமையாக அமுல்ப்படுத்தவும், அடுத்த கட்டமாக சமஸ்டி அடிப்படையிலான தீர்வை அமுல்ப்படுத்தக் கோரி இந்திய பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை அனுப்ப, தமிழ் தேசிய கூட்டமைப்பாக செயல்ப்படும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி முயற்சியெடுத்துள்ளது.

இந்த கடிதத்தில் இலங்கை தமிழ் அரசு கட்சி கையொப்பமிடுவதை தடுக்க, கட்சிக்குள் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தலைமையிலான பிரிவு தடுத்து வருகிறது.

தமிழ் தேசிய கூட்டமைப்பிலுள்ள 5 கட்சிகள், விக்னேஸ்வரனின் தமிழ் மக்கள் கூட்டணி ஆகியன இணங்கிய வரைபொன்று சில நாட்களின் முன்னர், இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவுக்கு அனுப்ப வைக்கப்பட்டுள்ளது.

அவர் அந்த கடிதத்தை எம்.ஏ.சுமந்திரனிடம் அனுப்பி வைத்தார்.

அந்த வரைபின் உள்ளடக்கத்தை சிதைக்கும் விதமாகவும், தமிழ் அரசு கட்சியினால் திருத்தம் செய்யப்பட்டது என்ற கருத்தை கூறும் விதமாகவும், ஒவ்வொரு பந்தியிலும் திருத்தம் செய்யப்பட்டு, மீள தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் அந்த வரைபு அனுப்பி வைக்கப்பட்டது.

அத்துடன், 13வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த கோருவதென்ற பகுதியும் அகற்றப்பட்டிருந்தது.

13வது திருத்தத்தை முழுமையாக அமுல்ப்படுத்த கோரியே இந்த கடிதம் அனுப்புகிறோம் என்பதை கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவுக்கு நினைவூட்டி, ஏன் 13வது திருத்தத்தை அமுல்ப்படுத்தக் கோரும் பகுதியை நீக்கினீர்கள் என ஏற்பாட்டாளர்கள் தரப்பில் கோரப்பட்டுள்ளது.

“13வது திருத்தத்தை அமுல்ப்படுத்தக் கோரும் பகுதியை நீக்கவில்லை, ஓரிடத்தில் உள்ளதே, நன்றாக பாருங்கள்“ என மாவை தரப்பிலிருந்து கூறப்பட்டுள்ளது.

எனினும், தமிழ் அரசு கட்சி திருத்திய கடிதத்தில் எந்த இடத்திலும் 13வது திருத்தம் பற்றி குறிப்பிடப்படவேயில்லை.

எம்.ஏ.சுமந்திரன் திருத்தம் செய்ததை கேள்வி கேட்க முடியாமலோ அல்லது நிலைமையை சமாளிக்கவோ அவர் அப்படி கூறுகிறார் என கருதிய ஏற்பாட்டாளர்கள், அவரிடம் அது பற்றி விவாதிப்பதை பின்னர் நிறுத்திவிட்டு, புதியதொரு வரைபு தயாரித்து அனுப்பி வைத்துள்ளனர்.

அந்த வரைபில், தமிழ் மக்களின் இனப்பிரச்சினை தீர்வு முயற்சியின் முதற்கட்ட நகர்வாக 13வது திருத்தத்தை முழுமையாக அமுல்ப்படுத்துவதுடன், சமஸ்டி அடிப்படையிலான இறுதித்தீர்வை வலியுறுத்தியுள்ளனர்.

இந்த வரைபுதான் இறுதியாக அனுப்பப்படும் வரைபு, இதில் இரு தரப்பும் பேசி பொருள் சிதையாமல் மாற்றம் செய்ய தயாராக இருப்பதாகவும், அப்படி இணங்காவிட்டால் தமிழ் தேசிய கூட்டமைப்பு தனியாக கையொப்பமிட்டு கடிதத்தை அனுப்பும் என்றும் தமிழ் அரசு கட்சிக்கு சொல்லப்பட்டது.

இது தொடர்பாக நேற்று இரவு நடந்த உரையாடல் ஒன்றில், ஒஸ்லோ தீர்மானத்தின் அடிப்படையிலும், தமிழ் மக்களுக்குள்ள வெளியக சுயநிர்ணய உரிமை அடிப்படையிலும், தீர்வு வழங்கப்பட வேண்டுமென்பதே தமிழ்  அரசுக்கட்சியின் நிலைப்பாடு என சொல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கட்சியின் சார்பில் செயற்படவல்ல முக்கிய தலைவர் ஒருவரை தமிழ்பக்கம் தொடர்பு கொண்டு பேசியபோது, தற்போதைய அரசியல் சூழலில் இவ்வாறான கோரிக்கையை வலயுறுத்துவதை விட தமக்கு வேறு வழியில்லையென்றார்.

13வது திருத்தத்தை  முழுமையாக அமுல்ப்படுத்தினாலே காணிகளை பாதுகாத்து, தொல்லியல் ஆக்கிரமிப்புக்களை தடுத்து நிறுத்தலாமென்ற யதார்த்தத்தில்- அதனை கூட அமுல்ப்படுத்த தமிழ் தரப்பினால் முடியாமல் உள்ள நிலையில், தமிழீழம், வெளியலக சுயநிர்ணயம், சமஸ்டி போன்றன உனடியாக சாத்தியமாகுமென எப்படி நம்புகிறீர்கள் என அவரிடம் வினவியபோது, இந்த யதார்த்தத்தை புரிந்து கொள்வதாக அவர் குறிப்பிட்டார்.

எனினும், தமிழ் தேசிய மக்கள் முன்னணி அதிதீவிர நிலைப்பாடு எடுத்துள்ள நிலையில், அவர்களை கணிசமாக இளைஞர்கள் ஆதரிக்க தொடங்குவதும், மோடிக்கு கடிதம் எழுதுவதன் பின்னணியிலுள்ள ரெலோவுடன் தமக்குள்ள தகராறையும் அந்த பிரமுகர் சுட்டிக்காட்டினார். இந்த பின்னணியில், தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சியாக தம்மால் வேறென்ன முடிவெடுக்க முடியுமென்றார்.

இந்த பின்னணியில், இம்முறை நரேந்திரமோடிக்கு வடக்கு, கிழக்கு தமிழ் தரப்பிலிருந்து 3 கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட வாய்ப்புள்ளது. 13வது திருத்தத்தை உடனடியாக அமுல்ப்படுத்தி, படிப்படியாக சமஸ்டி அடிப்படையிலான தீர்வை வலியுறுத்தி தமிழ் தேசிய கூட்டமைப்பும், 13 எமது பிரச்சினைக்கு தீர்வல்ல, தமிழ் தேசத்தை அங்கீகரித்து தீர்வை வழங்குமாறு தமிழ் தேசிய மக்கள் முன்னணியும், பிரிந்த செல்லும் உரித்தையும் கொண்ட தமிழர்களிற்கு, வெளியக சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தீர்வு – கிட்டத்தட்ட தமிழீழ தனிநாடு- வழங்குங்கள் என இலங்கை தமிழ் அரசு கட்சியும் கடிதம் எழுத வாய்ப்புள்ளது.

இதேவேளை, தமிழ் தேசிய கூட்டமைப்பு தயாரித்த வரைபு நேற்றிரவு இரா.சம்பந்தனுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அவர் தற்போது கூட்டமைப்பு தலைவராக இல்லாததால், கடிதத்தில் கையொப்பமிட முடியாத. இலங்கை தமிழ் அரசு கட்சி சார்பில் மாவை சேனாதிராசாவே கையொப்பமிட முடியும். இருந்தாலும், அவரது பார்வைக்கும் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இன்று காலையில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்களை அவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, வரைபு கிடைத்துள்ளதாகவும், படித்து விட்டு தனது திருத்தங்களை இன்று மாலையளவில் கூறுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

7 நடிகைகள், 9 அரசியல்வாதிகள், 13 சிறை உத்தியோகத்தர்களின் தரவுகள்: கெஹல்பத்தர பத்மேவின் தொலைபேசியில் வெளிப்பட்ட தகவல்கள்!

இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில்...

சிரியா மீதான கடைசித்தடையையும் நீக்கியது அமெரிக்கா

திங்களன்று, அமெரிக்கா தனது பயங்கரவாதத்திற்கு நிதியுதவி அளிக்கும் நாடுகள் (SST) பட்டியலில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்