இஸ்லாமிய சமயத்தை சேர்ந்த சகோதரர்கள் இருவரை காதலித்து வந்த சைவ சமயத்தை சேர்ந்த சகோதரிகள் இருவர், பெற்றோரின் எதிர்ப்பு காரணமாக கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர்.
திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சியை அடுத்த வளநாடு அருகே உள்ள அயன்புதுப்பட்டியை சேர்ந்தவர் பிச்சை. கூலித்தொழிலாளி. இவரது மனைவி அகிலாண்டேஸ்வரி. இவர்களது மகள்கள் வித்யா (வயது 21), காயத்திரி (23).
இவர்கள் இருவரும் திருப்பூர் மாவட்டம், காங்கேயத்தில் தங்கி, அங்குள்ள ஒரு தனியார் டெக்ஸ்டைல் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தனர்.
இவர்கள் இருவரும் பணியிடத்தில் காங்கேயத்தை சேர்ந்த முஸ்லிம் சகோதரர்கள் இருவருடன் அறிமுகமாகி காதலித்து வந்தனர். மதம் தாண்டிய காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களுடன் தொடர்பு கொள்வதை நிறுத்துமாறும் எச்சரித்திருந்தனர்.
இந்நிலையில் அயன்புதுப்பட்டியில் நேற்று முன்தினம் (6) நடைபெற்ற கோவில் திருவிழாவிற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு வித்யாவும், காயத்திரியும் சொந்த ஊருக்கு வந்தனர்.
அவர்கள் தொடர்ந்து செல்போனில் பேசிக்கொண்டிருந்தனர். இதனால் சந்தேகமடைந்த அகிலாண்டேஸ்வரி, மகள்கள் தொடர்ந்தும், முஸ்லிம் இளைஞர்களை காதலிக்கிறார்களா என கேட்டுள்ளார்.
மகள்களின் காதல் விவகாரம் தொடர்வது தெரியவந்ததையடுத்து, அவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு, இருவரையும் அகிலாண்டேஸ்வரி கண்டித்துள்ளார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் காலை 7.30 மணியளவில் வீட்டைவிட்டு வெளியே சென்ற வித்யாவும், காயத்திரியும் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.
இதனால் அவர்களை குடும்பத்தினர் தேடினர். வீட்டிலிருந்து 500 மீற்றர் தொலைவிலுள்ள ஒரு கிணற்றின் கரையில் 2 செல்போன்கள் கிடந்ததை, அப்பகுதியில் மாடு மேய்த்தவர்கள் பார்த்தனர். இதனால் சந்தேகமடைந்த அவர்கள், கிணற்றுக்குள் பார்த்தபோது, தண்ணீரில் ஒரு பெண் பிணமாக மிதந்ததை கண்டுள்ளனர்.
இது பற்றி அவர்கள் உடனடியாக வளநாடு போலீசார் மற்றும் துவரங்குறிச்சி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சிறப்பு நிலைய அலுவலர் நாகேந்திரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் மற்றும் இலுப்பூர் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று, பிணமாக மிதந்த பெண்ணின் உடலை மீட்டனர்.
அங்கு வந்த வளநாடு போலீசார், இது பற்றி விசாரணை நடத்தியபோது, கிணற்றில் பிணமாக மிதந்தது காயத்திரி என்பது தெரியவந்தது. மேலும் கரையில் 2 செல்போன்கள் இருந்ததால், வித்யாவும் கிணற்றில் மூழ்கியிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. இதைத்தொடர்ந்து கிணற்றுக்குள் தீயணைப்பு வீரர்கள் தேடினர். அப்போது தண்ணீருக்கடியில் இருந்து வித்யாவை பிணமாக மீட்டனர்.
இதில் வித்யா தனது கையில் தனது பெயரை எழுதியிருந்தது தெரியவந்தது.
போலீசார் விசாரணை இதைத்தொடர்ந்து வித்யா, காயத்திரி ஆகியோரின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து வளநாடு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து தாய் கண்டித்ததால் சகோதரிகள் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.
இதையடுத்து வித்யா, காயத்திரி ஆகியோரின் செல்போன்களை போலீசார் கைப்பற்றி தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



