கேரள மாநிலம், கோட்டயம் காத்திரப்பள்ளி பகுதியில் அமர் ஜோதி பொறியியல் கல்லூரி அமைந்திருக்கிறது. இங்கு இரண்டாம் ஆண்டு ஃபுட் சேஃப்டி பிரிவில் திருப்பூணித்துறையைச் சேர்ந்த மாணவி ஸ்ரத்தா (20) படித்துவந்தார். இவர் கடந்த வெள்ளிக்கிழமை கல்லூரி ஆய்வுக்கூடத்துக்குச் சென்றபோது அவரிடமிருந்து செல்போனை ஆசிரியர்கள் வாங்கியதாகக் கூறப்படுகிறது. வெள்ளிக்கிழமை ஹாஸ்டல் அறையில் மின் விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் ஸ்ரத்தா கண்டுபிடிக்கப்பட்டார். அவரை உடனடியாக மீட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டுசென்றிருக்கின்றனர். ஆனாலும், அவரைக் காப்பாற்ற முடியவில்லை. முதலில் தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் தற்கொலை செய்ததாகக் கூறப்பட்டது.
ஆனால், மாணவியை ஆசிரியர்கள் மனதளவில் காயப்படுத்தியதால், அவர் தற்கொலை செய்துகொண்டதாக சக மாணவர்கள் கூறுகின்றனர். மேலும், மாணவியின் மரணத்துக்கு நீதிகேட்டு மாணவர் அமைப்பினர் போராட்டம் நடத்திவருகின்றனர்.
இது குறித்து மாணவியின் பெற்றோர் பேசுகையில், ‘லேபில் வைத்து மகளின் செல்போனை வாங்கியிருக்கின்றனர். பின்னர், ஹெச்.ஓ.டி எங்கள் மகளிடம் எதோ சொல்லியிருக்கிறார். அவளைத் துன்புறுத்தியிருக்கிறார்கள். மருத்துவமனைக்குக் கொண்டுசெல்வதில் அலட்சியம் காட்டியதுடன், மருத்துவர்களிடம் தூக்கில் தொங்கியதை மறைத்திருக்கின்றனர். தலைச்சுற்றி கீழே விழுந்ததாக மருத்துவர்களிடம் கூறியதால், அவர்கள் சரியான முறையில் சிகிச்சை அளிக்க முடியாத நிலை ஏற்பட்டு, எங்கள் மகள் மரணமடைந்துவிட்டாள்’ என்றனர்.
இது குறித்து சக மாணவிகள், ‘லேபுக்குச் சென்றுவிட்டு வெளியே வந்த மாணவி தளர்ந்த நிலையில் இருந்தார். மதியம் வரை மிகவும் சந்தோஷமாக இருந்த மாணவி, `இனி நான் மரணித்தால்போதும்’ என அடிக்கடி கூறிக்கொண்டேயிருந்தார். லேபில் வைத்து துறைத்தலைவர் மாணவியிடம் என்ன கூறினார் என்பது எங்களுக்குத் தெரியவில்லை. மருத்துவமனைக்குச் சென்றபோதும் அவளுக்கு உயிர் இருந்திருக்கிறது. ஆனால், மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்கவில்லை. அவர் தூக்கில் தொங்கினார் எனக் கூறாமல், திடீரென மயங்கி விழுந்ததாக மருத்துவமனையில் கூறியிருக்கின்றனர். எதற்காக அப்படிக் கூறினார்கள் எனத் தெரியவில்லை. நாங்கள் எதாவது கூறினால் எங்கள்மீது சஸ்பெண்ட் உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்கிறார்கள். ஃபாரன்ஸிக், போலீஸ் உள்ளிட்டவர்கள் இன்னும் விசாரணை நடத்தவில்லை. என்ன நடந்தது என எங்களிடம் போலீஸ் விசாரிக்கவில்லை. ஹெச்.ஓ.டி எங்கள் முன்பு வந்து நாங்கள் கேட்கும் கேள்விக்கு பதில் அளிக்க வேண்டும்’ என்றனர்.
மாணவி மரணத்துக்கு நீதிகேட்டு மாணவர்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தி வருகின்றனர். வழக்கில் சமரசம் ஏற்படுத்த கல்லூரி நிர்வாகம் முயல்வதாகக் கூறி, மாணவர்கள் போராட்டம் நடத்தினர். அதில் போலீஸாருக்கும் மாணவர்களுக்குமிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது சில மாணவர்களை போலீஸார் தாக்கியதாகப் புகார் எழுந்திருக்கிறது. தொடர்ந்து போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல மாணவர்கள் தீர்மானித்திருக்கின்றனர். அதேசமயம் மாணவர்களின் போராட்டம் விசாரணையில் பின்னடைவை ஏற்படுத்துவதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். கல்லூரி தற்காலிகமாக மூடப்பட்டிருக்கிறது. மாணவி மரணம் குறித்து மாநில இளைஞர் நல ஆணையம் தாமாக முன்வந்து வழக்கை எடுத்திருக்கிறது. உரிய விசாரணை நடத்தி ரிப்போர்ட் அளிக்கும்படி மாவட்ட எஸ்.பி-க்கு இளைஞர் நல ஆணையம் உத்தரவிட்டிருக்கிறது.



