முன்னாள் காதலியின் திருமணத்திலன்று, அவரது வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து, அவரது முகத்தில் அசிட் வீசிய கொடூரன் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
வெலிகம பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதுடைய யுவதி ஒருவரே அசிட் வீச்சுக்கு இலக்காகியுள்ளார். திருமணத்திற்காகப் புறப்படத் தயாரான மணப்பெண், முன்னாள் காதலனால் வீசப்பட்ட அசிட் வீச்சினால் காயமடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக வெலிகம பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த யுவதி அதே பிரதேசத்தில் வசிக்கும் இளைஞர் ஒருவருடன் சுமார் ஒன்றரை வருடங்களாக காதல் தொடர்பு கொண்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பின்னர் யுவதி அந்த காதல் உறவை பாதியில் நிறுத்தி விட்டார். இதை தொடர்ந்து அந்த இளைஞர் போதைக்கு அடிமையானார்.
இதை தொடர்ந்து, அந்த யுவதி தனது பெற்றோரின் விருப்பப்படி திருமணத்துக்கு சம்மதித்துள்ளார். கடந்த 27ஆம் திகதி சனிக்கிழமை திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.
அவர்களின் திருமணத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
அன்று அதிகாலை மூன்று மணி இருக்கும் போது, மகளின் அறையில் அலறல் சத்தம் கேட்டு தாயார் ஓடி வந்துள்ளார். மகளின் முன்னாள் காதலன் மகளின் அறையிலிருந்து வருவதையும், வீட்டின் பின் வாசலால் தப்பியோடுவதையும் பார்த்தார்.
மகளின் அறைக்கு பெற்றோர் சென்று பார்த்தபோது, முகம், கழுத்து, முதுகு ஆகிய பகுதிகளில் அசிட் வீசப்பட்டிருந்ததை பார்த்தனர். பின்னர், தமது மகளை மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதித்த பின்னர் வெலிகம பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.
வெலிகம பொலிஸார் குற்றவாளியை கைது செய்யும் நடவடிக்கையை மேற்கொண்டனர்.
பொலிசாரிடம் சிக்காமல் தலைமறைவாக இருந்த குற்றவாளி, தனது வீட்டுக்குச் சென்றபோது, பொலிசார் வீட்டை சுற்றிவளைத்து முன்னாள் காதலனைக் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நேற்று மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
தன்னை காதலித்து ஏமாற்றியதால் முன்னாள் காதலிக்கு தண்டனை வழங்க அசிட் வீசியதாக அந்த கொடூரன் வாக்குமூலமளித்துள்ளார்.
அசிட் வீச்சில் படுகாயமடைந்த யுவதி தற்போது மாத்தறை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன் நடைபெறவிருந்த திருமணம் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. இச்சம்பவம் இடம்பெற்ற போது, திருமண நிகழ்வில் கலந்து கொள்ளவிருந்த சுமார் நானூறு பேருக்கு உணவு தயாராகிக் கொண்டிருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிகம பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.