கொரோனா வைரஸ் பாதிப்புகள் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு ஜார்க்கண்டில் அம் மாநில முதல்வர், ஹேமந்த் சோரன் அரசாங்கம் ஏப்ரல் 22 முதல் 29 வரை மாநிலம் முழுவதும் ஊரடங்கு விதிப்பதாக அறிவித்துள்ளது.
ஊரடங்கு காலத்தில் பொது மக்களுக்கு சில தளர்வுகளை வழங்கும் வகையில், ஜார்க்கண்ட் அரசு அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும் அனுமதி அளித்துள்ளது.
மத இடங்கள் செயல்பட தடை விதிக்கப்படவில்லை என்றாலும், அங்கு பக்தர்கள் கூடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. சுரங்க, விவசாய மற்றும் கட்டுமான நடவடிக்கைகள் தொடர ஜார்கண்ட் அரசாங்கம் அனுமதித்துள்ளது.
முன்னதாக நேற்று ஏப்ரல் 19’ஆம் தேதி ஜார்க்கண்டில் 3,992 புதிய கொரோனா வைரஸ் பாதிப்புகள் பதிவாகியுள்ளன. அங்கு மொத்த பாதிப்புகளின் 1,62,945 ஆக உள்ளது. மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள சமீபத்திய தரவுகளின்படி, நேற்று மேலும் 50 பேர் இந்த நோயால் இறந்துள்ளனர். இது கொரோனா இறப்பு எண்ணிக்கையை 1,456 ஆக உயர்த்தியுள்ளது.
தற்போது சிகிச்சையில் உள்ள நோயாளிகளின் எண்ணிக்கை 28,010 என்றும், 1,33,479 பேர் நோய்த்தொற்றிலிருந்து தற்போது வரை மீண்டு வந்துள்ளதாகவும் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
மே 1, 2021 முதல் கொரோனா தடுப்பூசியின் தாராளமயமாக்கப்பட்ட மற்றும் துரிதப்படுத்தப்பட்ட மூன்றாம் கட்ட செயல்திட்டத்தை இந்திய அரசு நேற்று அறிவித்தது. மே 1 முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த மத்திய அரசு அனுமதித்துள்ளது.