தூத்துக்குடி கடல் பகுதிக்கு 6 பேருடன் வந்த குஜராத் படகை, மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள், சிறை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கேரள மாநிலம் கொச்சி கடல் பரப்பில் கடந்த வாரம் கடலோர காவல்படையினர் மற்றும் மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு (என்சிபி) அதிகாரிகள் இணைந்து ஒரு கப்பலை மடக்கி சோதனை செய்தனர். அதில் இருந்து ரூ.15 ஆயிரம் கோடி மதிப்புள்ள 2,525 கிலோ கிறிஸ்டல் மெத்தம் பீட்டாமைன் என்ற போதை பொருளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
நடுக்கடலில் நிறுத்தி வைக்கப்பட்ட இக்கப்பலில் இருந்து, சிறிய படகுகள் மூலம் போதை பொருளை கடத்திச் சென்றிருப்பதும் தெரியவந்தது. இதுபற்றி நவீன தொழில்நுட்ப உதவியுடன் தீவிர விசாரணை நடத்தினர்.
குஜராத்தை சேர்ந்த ஒரு பழைய மீன்பிடி விசைப்படகு சந்தேகத்துக்கு இடமான முறையில் அந்த பகுதிக்கு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த படகுக்கு போதை பொருள் கடத்தலில் தொடர்பு இருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அந்த விசைப்படகை அதிகாரிகள், நவீன தொழில்நுட்பம் மூலம் கண்காணித்தனர்.
அந்த படகு குஜராத்தில் இருந்து 6 பேருடன் புறப்பட்டுள்ளது. கொச்சியை கடந்து கன்னியாகுமரி நோக்கி சென்றது. சென்னையை சேர்ந்த மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு ஆய்வாளர் அருண்குமார் தலைமையிலான அதிகாரிகள் அந்த படகை கண்காணிக்க தூத்துக்குடிக்கு வந்தனர்.
முன்னதாக படகில் பழுது ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் அந்த படகில் இருந்தவர்களுக்கு, தாங்கள் அதிகாரிகள் என்பதை மறைத்து உதவி செய்ததாக கூறப்படுகிறது. அதன் பிறகு அவர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்துள்ளனர்.
மேலும், படகை முழுமையாக சரி பார்க்க தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளத்துக்கு வருமாறு அவர்களிடம், அதிகாரிகள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதை நம்பிய 6 பேரும் நேற்று படகுடன் தருவைகுளம் கடற்கரை பகுதிக்கு வந்தனர். அப்போது கரைக்கு அருகே வந்தபோது எதிர்பாராதவிதமாக படகு தரைதட்டியது. இதனால் படகில் இருக்கும் 6 பேரையும் படகிலேயே வைத்து அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். மேலும் அவர்கள் 6 பேரையும் விசாரணைக்காக சென்னைக்கு அழைத்து செல்லப்படவுள்ளனர்.