இலங்கை தமிழ் அரசு கட்சிக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்குமிடையில் இன்று சந்திப்பு நடக்கவுள்ளது.
மாலை 3.30 மணியளவில் ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு நடக்கவுள்ளது. இலங்கை தமிழ் அரசு கட்சியினர் விடுத்த வேண்டுகோளை ஏற்று, ஜனாதிபதி பேச்சுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
முன்னதாக, வரும் 11,12,13ஆம் திகதிகளில் வடக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் சந்திப்பில் கலந்துகொள்ளுமாறு ஜனாதிபதி செயலகம் அழைப்பு விடுத்திருந்தது.
அனைத்து எம்.பிக்களையும் பேச்சுக்கு அழைத்ததால், தம்மை முதலில் தனியாக சந்திக்க வேண்டுமென இரா.சம்பந்தன் தரப்பிலிருந்து ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.
அத்துடன், சந்திப்பில் கலந்து கொள்ளவுள்ளவர்கள் என, இலங்கை தமிழ் அரசு கட்சியுடன், தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களையும் குறிப்பிட்டு, 10 நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களையும் ஜனாதிபதி செயலகத்துக்கு வழங்கினர்.
அதனை வழங்கிய பின்னரே, தமிழ் தேசிய கூட்டமைப்பு தரப்புக்கு, இலங்கை தமிழ் அரசு கட்சியினர் விடயத்தை தெரிவித்து, சந்திப்புக்கு வருமாறு அழைப்பு விடுத்தனர். எனினும், இந்த சந்திப்பில் கலந்து கொள்வதில்லையென தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர்.




