உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் இரண்டாம் ஆண்டு தினமான ஏப்ரல் 21 ஆம் திகதி, காலை 8.45 மணிக்கு 02 நிமிட மௌன அஞ்சலி செலுத்துமாறு அனைத்து இலங்கையர்களிடமும் கர்தினல் மல்கம் ரஞ்சித் ஆண்டகை அழைப்பு விடுத்துள்ளார்.
உயிரிழந்தவர்களிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இந்த அழைப்பை விடுத்தார்.
அன்றைய தினம், கத்தோலிக்க திருச்சபையினால் நிர்வகிக்கப்படும் அனைத்து கத்தோலிக்க பாடசாலைகளிற்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, உயிர்த்த ஞாயிறு தினத்தை முன்னிட்டு தேவாலயங்களுக்கு அதிகபட்ச பாதுகாப்பு வழங்கப்பட உள்ளது.
தாக்குதலில் பலியானவர்களை நினைவுகூரும் வகையில் பல தேவாலயங்கள் புதன்கிழமை (21) சிறப்பு ஆராதனைகளை நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று பொலிஸ் பேச்சாளர் டி.ஐ.ஜி அஜித் ரோஹன தெரிவித்தார்.
ஆராதனைகளின் போது தேவாலயங்களுக்கு சிறப்பு பாதுகாப்பு வழங்குமாறு பொலிஸ் தலைமையகம் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கு தகவல் அளித்துள்ளது என்றார்.




