சாலிகிராமத்தில் எங்க வீடும் ஷோபா சந்திரசேகர் வீடும் ஒரே தெருவுலதான் இருந்துச்சு அந்த வகையில விஜய்யை சின்ன வயசுல இருந்தே எனக்குத் தெரியும். ரொம்ப அமைதியானவர்.” – வரலட்சுமி
“நான் சுந்தரியோட பாட்டியாக்கும்” என்கிற டயலாக்குடன் தொடர்ந்து டிரெண்டிங்கிலேயே இருக்கிறார் மூத்த நடிகை பி.ஆர். வரலட்சுமி. 1966-ல் சினிமா உலகில் அடியெடுத்து வைத்தவர், 70-களிலும் 80-களிலும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் வலம் வந்திருக்கிறார். எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக `நவரத்தினம்’, கமலுக்கு ஜோடியாக `சங்கர்லால்’ என உச்ச நட்சத்திரங்களுக்கு நாயகியாக நடித்துக்கொண்டிருந்தவர் திருமணம், குழந்தைப் பிறப்புக்குப் பிறகு சில வருடங்கள் சினிமாவுக்கு பிரேக் விட்டிருக்கிறார். அடுத்த ரவுண்டில் `பூவே உனக்காக’, `நான் அவனில்லை’ என்று இளைய தலைமுறையினருடன் நடிக்க ஆரம்பித்தவர், தற்போது சீரியல்களில் பாட்டியாக நடித்து எல்லோருடைய மனங்களையும் கொள்ளையடித்து வருகிறார்..
“சின்ன வயசுல எங்க தெருவுல இருக்கிறவங்க என்னை `சாவித்ரி மாதிரியே இருக்கே’ன்னு சொல்வாங்க அதைக் கேட்டு கேட்டுதான் எனக்கு சினிமாவுல நடிக்கணும்ங்கிற ஆசை வந்துச்சு. தமிழ்ல `வாழையடி வாழை’தான் என்னோட முதல் படம். ஓர் ஏழை வீட்டின் மூத்த மகள் கேரக்டர். ரொம்ப உருக்கமான ரோல் என்னுடையது. `சினிமா பைத்தியம்’ படத்துல பெரிய ஹீரோயின் ஆகணும்னு வீட்டைவிட்டு வெளிய வந்த கேரக்டர் என்னுடையது. ஆனா, பெரிய அளவுல வாய்ப்புகள் கிடைக்காது. ஒரு ஷூட்டிங்ல சாப்பிடுற மாதிரி சீன் எடுப்பாங்க. ஷாட் எடுக்கிறப்போ சாப்பிட வேண்டிய நான் பசி தாங்க முடியாம டைரக்டர் ஆக்ஷன் சொல்றதுக்கு முன்னாடியே சாப்பாட்டை அள்ளி அள்ளிச் சாப்பிட ஆரம்பிச்சுடுவேன். என்னை ரொம்ப ரொம்ப பாதிச்ச காட்சி அது” என்கிற வரலட்சுமிதான், டைரக்டர் பாலுமகேந்திரா முதல் முதலில் ஃபிரேம் வைத்த நடிகை.
“அதுவொரு மலையாளப்படம். பேரு `பணி முடக்கு’. அதுல நான் டூயல் ரோல் செஞ்சிருந்தேன். அந்தப் படத்துக்காகத்தான் அந்த முதல் ஃபிரேம் பாக்கியம் கிடைச்சிது” என்பவருடைய முகத்தில் இன்னமும் பெருமிதம் தெரிகிறது.
விஜய்யுடன் `பூவே உனக்காக’ அனுபவம்;
“சாலிகிராமத்தில் எங்க வீடும் ஷோபா சந்திரசேகர் வீடும் ஒரே தெருவுலதான் இருந்துச்சு அந்த வகையில விஜய்யை சின்ன வயசுல இருந்தே எனக்குத் தெரியும். ரொம்ப அமைதியானவர். பூவே உனக்காக படத்துல அவரோட நடிச்சபோதும் அதே அமைதிதான். தானுண்டு தன் நடிப்பு உண்டுன்னு இருக்கிற நடிகர் அவர்” என்கிற வரலட்சுமி, கலைமாமணி உட்பட இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றிருக்கிறார்.
“எல்லோருக்கும் ஹீரோவை பிடிக்கும், ஹீரோயினை பிடிக்கும், இல்லைன்னா காமெடியனை பிடிக்கும். இன்னும் சிலருக்கு வில்லனை, கேரக்டர் ரோல் செய்யுறவங்களைப் பிடிக்கும். ஆனா, பாட்டியா நடிக்கிற என்னை எல்லாருக்கும் பிடிக்குதுங்கிறது ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு. அவுட்டோர் ஷூட்டிங் போறப்போ `சுந்தரி’ சீரியல் பார்க்கிற நிறைய பொம்பள பிள்ளைங்க, `பாட்டி நீங்க எங்க வீட்டுக்கு வந்துடுங்க’ன்னு என்னைக் கூப்பிடுறாங்க. சிலர் `உங்களை நாங்க தங்கம் மாதிரி வெச்சுப் பார்த்துக்கிறோம். உங்கள மாதிரி பாட்டி ஒவ்வொரு குடும்பத்துக்கும் தேவை’ங்கிறாங்க. இன்னிக்கு என்னை லைக் பண்ணாதவங்களே இல்ல.
இயக்குநர், தயாரிப்பாளர், கேமராமேன்னு எல்லாரும் சுந்தரி டீமைச் சேர்ந்த அத்தனை பேரும் என்னை அப்பத்தா அப்பத்தான்னு தாங்குறாங்க. என் நடிப்பைக் கொண்டாடுறாங்க. அதை நான் தெரிஞ்சும் தெரியாத மாதிரி நைசா பார்த்துட்டு சந்தோஷப்பட்டுக்குவேன். அந்த டீம்ல இருக்கிறவங்க எல்லாரும் என்னோட குழந்தைங்க மாதிரி.