பத்தரமுல்லையில் உள்ள கல்வி அமைச்சுக்குள் பலவந்தமாக நுழைந்த குற்றச்சாட்டில் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே உட்பட 56 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 30 மாணவர் பிக்குகள் உட்பட 56 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஹோமாகம, பிடிபனவில் உள்ள பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழகத்தை மீள திறக்குமாறு கோரி, குறித்த குழுவினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன், கல்வி அமைச்சுக்குள் பிரவேசித்துள்ளனர்.
நேற்றைய தினம் (22) நடத்திய சத்தியாக்கிரகத்தை கலைக்க கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் செய்த பொலிஸாருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இலங்கையின் பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழகம் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு மாத்திரம் திறக்கப்படும் என பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் நெலுவே சுமனவன்ச தேரர் இன்று (23) அறிவித்ததை அடுத்து இந்த போராட்டம் இடம்பெற்றுள்ளது.
2023 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 27 ஆம் திகதி பல்கலைக்கழகம் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு திறக்கப்படும் என பேராசிரியர் நெலுவே சுமனவன்ச தேரர் தெரிவித்தார்.
அனைத்து மாணவர்களுக்கும் ஒரே நேரத்தில் பல்கலைக்கழகத்தை திறப்பது சாத்தியமில்லை என்றும், பல்கலைக்கழகத்தை கட்டம் கட்டமாக திறக்க நிர்வாக சபை அறிவுறுத்தியுள்ளது என்றும் தேரர் கூறினார்.