கஞ்சா கலந்த சொக்லேட்களை தயாரித்து வெளியிட்ட நிறுவனத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஆயுர்வேத திணைக்களம் தெரிவித்ததாக ஆயுர்வேத திணைக்களத்தின் வைத்திய கலாநிதி பி.தரங்க தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு அவர் கருத்து தெரிவிக்கையில் கஞ்சா கலந்த சொக்லேட்டுகள் காதலர் தின சந்தைக்காக உருவாக்கப்பட்டதாகவும், அது பற்றிய பல சமூக ஊடக விளம்பரங்கள் காணப்படுவதாகவும் கூறினார்.
ஆயுர்வேத திணைக்களத்தின் பெயரை தவறாக பயன்படுத்தி இந்த சொக்லேட் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், காதலர் தினத்தை கொண்டாடும் இளைஞர்களை குறிவைத்து விளம்பரங்கள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் கூறினார்.
இந்த சமூக ஊடகத் தளங்கள் மூலம் ஆயுர்வேதப் பெயரைப் பயன்படுத்தி ஆயுர்வேதமற்ற மருந்தை விளம்பரப்படுத்துவது சட்டவிரோதமானது மற்றும் நெறிமுறையற்றது என்று கூறினார்.
ஆயுர்வேதத்தின் பெயரைக் குறிப்பிடும் போது கஞ்சா அடங்கிய உணவுப் பொருளை உற்பத்தி செய்வதற்கும் விளம்பரப்படுத்துவதற்கும் முன் உரிய அதிகாரிகளின் அனுமதியைப் பெற வேண்டும் என்றும் அவர் கூறினார்.
புதிதாக தயாரிக்கப்படும் மருந்து அல்லது உணவுக்கு ஆயுர்வேத திணைக்களத்தின் அங்கீகாரம் கிடைத்த நிலையில் கூட, விளம்பரத்திற்கு மற்றொரு அனுமதி பெற வேண்டும், என்றார்.
“ஆயுர்வேதத்திற்கும் சொக்லேட்டுகளுக்கும் இடையே தொடர்பை நாங்கள் காணவில்லை. சொக்லேட்டை மருந்தாகப் பயன்படுத்துவதில்லை. எனவே, இந்த நடவடிக்கை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்” என்று கூறினார்.




