தமிழ் தேசிய கூட்டமைப்பில் புதிய கட்சிகளை இணைக்கக்கூடாது. தேவையென்றால், பிரிந்து சென்றவர்கள் முன்னர் எந்த கட்சியில் இருந்தார்களோ, அந்தக் கட்சியில் இணைந்து கொள்ளலாம் என இலங்கை தமிழ் அரசு கட்சியில் எகத்தளமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்தியகுழு கூட்டம் இன்று நடைபெற்றது. இதன்போது, பேசப்பட்ட முக்கிய விடயங்களின் சுருக்கம் வருமாறு-
தமிழ் அரசு கட்சி தனித்து போட்டியிட வேண்டுமென முல்லைத்தீவு கிளையை சேர்ந்தவர்களே, ஆரம்பத்தில் அதிகம் வலியுறுத்தினர். சாந்தி சிறிஸ்கந்தராசா, சி.சிவமோகன், பீற்றர் இளஞ்செழியன் ஆகியோர் பிரிந்து சென்று தேர்தலில் போட்டியிட வேண்டுமென்றனர்.
அதை தொடர்ந்து ஏனையவர்களும் அதை ஆதரித்தனர். இந்த தொகுதியில் வெற்றி பெறாவிட்டாலும் பரவாயில்லை, தனித்து போட்டியிட வேண்டுமென இளைஞர் அணி தலைவர் சேயோன் தெரிவித்தார்.
கட்சியின் முன்னாள் செயலாளர் கி.துரைராசசிங்கம் தனக்கு விடுதலைப் புலிகள் ஒரு தகவல் தெரிவித்தார்கள் என்றும், இப்பொழுது கூட்டமைப்பிலிருக்கும் சிலரை இணைக்கக்கூடாதென அப்போது தெரிவித்திருந்தார்கள் என்றும் புதுக்குண்டு வெடிக்க வைத்தார்.
அப்போது, மத்தியகுழுவிலிருந்தவர்களிற்கு பொருத்தமான அறிவுரையை சட்டத்தரணி கே.வி.தவராசா வழங்கினார்.
“இது சாதாரண உள்ளூராட்சி தேர்தல். இந்த தேர்தலின் மூலம் அரசுக்கோ, சர்வதேசத்திற்கோ செய்தி சொல்வதென்று இல்லை. இப்படியான நிலைமையில் பிரிந்து போட்டியிட்டால், இதற்கடுத்த தீர்மானம் மிக்க தேர்தல்களில் கூட்டமைப்பு பிளவடையும். ஆகவே சுயநலமாக சிந்திக்காமல் இனத்தின் நலனின் அடிப்படையில் சிந்திக்க வேண்டுமென்றார்.
எனினும், அதனை மற்றையவர்கள் ஆதரிக்கவில்லை.
தமிழ் தேசிய கூட்டமைப்பாக போட்டியிட முடியாது
இலங்கை தமிழ் அரசு கட்சி தனித்து போட்டியிட்டால், ஏனைய இரண்டு கட்சிகளும் தமிழ் தேசிய கூட்டமைப்பாக போட்டியிடும் என அறிவித்தனர், ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பெயரை பாவித்து தேர்தலில் போட்டியிட முடியாது என எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
வீட்டு சின்னத்துடன், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பெயர் தேர்தல்கள் திணைக்களத்தில் பதிவாகியுள்ளது. அதனை மற்றைய பங்காளிகள் பயன்படுத்த முடியாது என்றார்.
கூட்டமைப்பை பதிவு செய்ய முடியாது
தமிழ் தேசிய கூட்டமைப்பில் புதிய கட்சிகளை இணைத்து, தமிழ் தேசிய கூட்டமைப்பை பதிவு செய்ய வேண்டுமென ரெலோ, புளொட் தலைவர்கள், இரா.சம்பந்தனிற்கு கடிதம் அனுப்பியிருந்தனர்.
இது குறித்தும் ஆராயப்பட்டது.
தமிழ் தேசிய கூட்டமைப்பை பதிவு செய்ய முடியாது என மத்தியகுழுவில் தெரிவிக்கப்பட்டது.
அத்துடன், புதிய கட்சிகளை இணைத்துக்கொள்ளக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டது. தேவையெனில், விலகிச் சென்றவர்கள், அவர்கள் முதல் எந்த கட்சியிலிருந்து சென்றார்களோ, அந்தக்கட்சியில் இணைந்து கொள்ளலாம். உதாரணமாக, விக்னேஸ்வரன் தமிழ் அரசு கட்சியிலும், சிவாஜிலிங்கம் தரப்பினர் ரெலோவிலும் இணைந்து கொள்ளலாம் என்றனர்.
இந்த வில்லங்கத்தனமாக கருத்தை சொன்னவர், முன்னாள் யாழ் முதல்வர் ஆர்னோல்ட்.
ஈ.பி.ஆர்.எல்.எவ் பற்றி பின்னர் ஆராயலாம் என கூறப்பட்டது.
ஜனநாயக போராளிகள் சின்னவீடாக இருப்பர்
ஜனநாயகப் போராளிகள் கட்சியினரையும் அரவணைத்துச் செல்ல வேண்டுமென வடக்கு அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்தார். இது குறித்து கருத்துப் பரிமாறப்படவில்லை.
ஜனநாயக போராளிகள் கட்சியினர் இப்பொழுது இலங்கை தமிழ் அரசு கட்சியின் “சின்ன வீடு“ பாணியிலேயே செயற்படுகிறார்கள். உத்தியோகபூர்வ பங்காளிகளாக இணைக்கப்படவில்லை. தமிழ் அரசு கட்சியின் வேட்பாளர் பட்டியலில் ஓரிரண்டு இடங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதேவிதமான பாத்திரமே அடுத்த உள்ளூராட்சி தேர்தலிலும் நீடிக்கும்.
பேச்சில் நம்பிக்கையில்லை
அரசாங்கத்துடன் நடக்கும் பேச்சில் தமக்கு நம்பிக்கையில்லையென எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். பிரதமர் தினேஸ் குணவர்த்தன பேச்சுக்களிற்கு வந்து வாய்திறக்காமல் இருப்பதை சுட்டிக்காட்டி, பெரமுனவின் நகர்வில் சந்தேகம் தெரிவித்தார்.