இந்திய அணிக்கு எதிரான 2வது ரி20 போட்டியில் இலங்கை அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 207 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இந்திய அணி 190 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
புனே நகரில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் இந்த போட்டி நடைபெற்றது. இதில் நாணயச்சுழற்சியில் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் ஆடிய இலங்கை 206 ரன்களை குவித்தது. தொடக்க வீரர் குசல் மென்டிஸ் 31 பந்துகளில் 52 ஓட்டங்கள் குவித்தார்.அவர், பதும் நிசங்கவுடன் முதல் விக்கெட்டிற்கு 80 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர் இலங்கையின் தொடக்க ஆட்டக்காரர்கள்.
8 ஓவர்களின் பின்னர் இந்திய சுழற்பந்து வீச்சாளர்களான அக்சர் படேல் மற்றும் சஹல் இலங்கையில் ரன் குவிப்பை கட்டுப்படுத்தினர்.
ஆனாலும் அது அனைத்தும் கடைசி 5 ஓவர்களில் தலைகீழாக மாறியது. இடையில், அசலங்க 19 பந்துகளில் 37 ஓட்டங்கள் குவித்தார். கடைசிக்கட்டத்தில் இலங்கை காட்டடி அடித்தது.
15 ஓவர்கள் முடிவில் 129 ஓட்டங்கள் எடுத்திருந்த அந்த அணி கடைசி 30 பந்துகளில் 77 ஓட்டங்கள் குவித்தது. இந்திய வேகப்பந்து வீச்சாளர்களை இரக்கமின்றி அடித்து நொறுக்கினர்.
இலங்கை அணியின் கப்டன் தசுன் ஷானக22 பந்துகளில் 56 ஓட்டங்கள் குவித்தார். இலங்கை 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 206 ஓட்டங்கள் குவித்தது.
முதல் போட்டியில் ஆட்டநாயகன் விருது வென்ற சிவம் மாவி வறுத்தெடுக்கப்பட்டார். 4 ஓவர்கள் வீசி 53 ஓட்டங்கள் விட்டுக் கொடுத்தார்.
207 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை இந்தியா விரட்டியது.
இந்திய அணிக்காக இஷான் கிஷன் மற்றும் சுப்மன் கில்லும் இணைந்து இன்னிங்ஸை ஓபன் செய்தனர். பவர்பிளே ஓவர்கள் முடிவதற்குள் இஷான் கிஷன், கில், ராகுல் திரிபாதி மற்றும் கப்டன் ஹர்திக் பாண்டியா ஆகியோர் தங்களது விக்கெட்டுகளை இழந்தனர். தீபக் ஹூடாவும் 9 ஓட்டங்களில் வெளியேறினார்.
57 ஓட்டங்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்தது இந்தியா. அப்போது களத்திற்குள் வந்தார் அக்சர் படேல். சூர்யகுமார் யாதவுடன் 91 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தார். இருவரும் அரை சதம் கடந்து அசத்தினர். சூர்யகுமார், 51 ஓட்டங்களில் வெளியேறினார்.
பின்னர் வந்த ஷிவம் மாவி தன் பங்கிற்கு 2 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்களை விளாசி 15 பந்துகளில் 26 ஓட்டங்களை குவித்தார். 6 சிக்ஸர்களை விளாசிய அக்சர் படேல் 31 பந்துகளில் 65 ஓட்டங்கள் எடுத்து கடைசி ஓவரில் வெளியேறினார். கடைசி பந்தில் ஷிவம் மாவியும் விக்கெட்டை இழந்தார். 20 ஓவர்கள் முடிவில் இந்தியா 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 190 ஓட்டங்கள் எடுத்தது. அதனால் இலங்கை 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இலங்கை தரப்பில் தசுன் ஷானக, டில்ஷான் மதுஷங்க, கசுன் ராஜித தலா 2 விக்கெட்டுக்கள் வீழ்த்தினர்.
ஆட்டநாயகன் தசுன் ஷானக.
இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட இந்த தொடர் 1-1 என சமனில் உள்ளது. வரும் 7ஆம் திகதி ராஜ்கோட்டில் நடைபெற உள்ள மூன்றாவது மற்றும் கடைசி போட்டியில் வெல்லும் அணி தொடரையும் வெல்லும்.