“பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் தற்கொலை செய்துகொள்ளவில்லை; அவர் கொலை செய்யப்பட்டிருக்கிறார்” என்று அவருக்கு பிரதேச பரிசோதனை செய்த குழுவில் இருந்த ஊழியர் ஒருவர் கூறியுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தி சின்னத்திரை தொடர்கள் மூலம் நடிப்புலகில் அறிமுகமானவர் சுஷாந்த். பிஹாரைச் சேர்ந்த இவர் ‘தேஷ் மேன் ஹாய் மேரா தில்’ என்ற தொடரில் முதன்முதலில் நடித்தார். பின் 2009-ம் ஆண்டு பவித்ர ரிஷ்தா என்ற தொடரின் மூலம் கவனம் பெற்றார். இந்தத் தொடர் அவருக்கு விருதையும் பெற்றுத்தந்தது.
2013-ம் ஆண்டு, எழுத்தாளர் சேத்தன் பகத் எழுதிய ‘த்ரீ மிஸ்டேக்ஸ் ஆஃப் மை லைஃப் ‘(3 mistakes of my life) புத்தகத்தின் திரைப்பட வடிவமான ‘கை போ சே’ (Kai Po Che) மூலம் நாயகனாக பாலிவுட்டில் அறிமுகமானார். தொடர்ந்து ‘ஷுத் தேஸி ரொமான்ஸ்’, ‘டிடெக்டிவ் ப்யோம்கேஷ் பாக்ஷி’ ஆகிய படங்கள் மூலம் பாலிவுட்டின் முக்கிய நடிகர்களில் ஒருவராக குறுகிய காலத்தில் வளர்ந்தார். ஆமிர்கானின் ‘பிகே’ படத்திலும் உறுதுணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்
2016-ம் ஆண்டு, இந்திய கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனியின் வாழ்க்கைக் கதையைச் சொல்லும் ‘எம்.எஸ்.தோனி தி அண்ட்லோட் ஸ்டோரி’ (MS Dhoni: The Untold Story) திரைப்படம் இவரை மொழிகள் தாண்டி பிரபலமாக்கியது. ஆனால், உடனடியாக அடுத்தடுத்து படங்கள் ஒப்பந்தம் செய்யாமல் நிதானத்தையே கடைபிடித்து வந்தார். கடைசியாக இவர் நடித்து திரையரங்கில் வெளியான திரைப்படம் ‘சிச்சோரே’ (2019). இந்தப் படத்தின் விமர்சனங்கள் சுஷாந்தின் நடிப்பை பாராட்டியிருந்தன.
சுஷாந்த் மும்பை பந்த்ராவில், தன் இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரது தற்கொலைக்கான காரணம் இன்னும் தெரியவில்லை. விசாரணை அமைப்புகள் சுஷாந்த் தற்கொலை தான் செய்து கொண்டார் என்று கூறின. ஆனால், இன்று வரை சுஷாந்தின் பெற்றோர், நெருங்கிய நண்பர்கள் சுஷாந்த் தற்கொலை செய்துகொள்ளவில்லை; இதில் ஏதோ மர்மம் இருக்கிறது எனக் கூறி வருகின்றனர்.
இந்நிலையில், சுஷாந்த் சிங் பிரேத பரிசோதனை குழுவில் இருந்த ஊழியர் ஒருவர் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்தப் பேட்டியில், “சுஷாந்த் சிங் மறைந்த அன்று எங்களது மருத்துவமனைக்கு (கூப்பர் மருத்துவமனை) 5 பிரேதங்கள் வந்திருந்தன. அதில் ஒன்று விஐபி சடலம் என்றனர். நாங்கள் அங்கே போய் பார்த்தபோதுதான் அது சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் சடலம் என்பது தெரியவந்தது.
நான் சுஷாந்தின் உடலை பார்த்ததுமே அது, தற்கொலை அல்ல என்று சந்தேகப்பட்டேன். அவரது உடலில் பல இடங்களில் தடயங்கள் இருந்தன. கழுத்தில் இரண்டு, மூன்று இடங்களில் காயங்கள் இருந்தன. அந்த பிரேதப் பரிசோதனையை பதிவு செய்திருக்க வேண்டும். ஆனால், உயரதிகாரிகள் உடலை போட்டோ எடுத்துவிட்டு பிரேதப் பரிசோதனை செய்தால் போதுமென்றனர். நான் அவர்களிடம் வெளிப்படையாகவே சொன்னேன், விதிப்படி நடக்க வேண்டும் என்று. இது தற்கொலை என்று எனக்குத் தோன்றவில்லை என்றேன். ஆனால், என் சீனியர்கள் அதைக் கேட்கவில்லை. இரவில் பிரேதப் பரிசோதனை முடித்துக் கொடுத்தோம்” என்று கூறியுள்ளார். இது சுஷாந்த் தற்கொலை வழக்கில் புதிய கேள்விகளை எழுப்பும் விதமாக அமைந்துள்ளது.