தனது காதலை யுவதி ஏற்றுக்கொள்ளாத விரக்தியில் இளைஞன் ஒருவர் தனக்குத்தானே தீவைத்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். தனது உடலில் தீவைத்த பின்னர், காதலியையும் கட்டியணைத்து கொலை செய்ய முயன்றுள்ளார்.
எனினும், அங்கிருந்தவர்களால் யுவதி காயங்களுடன் காப்பாற்றப்பட்டுள்ளார். உடலில் தீ வைத்துக் கொண்டு ஓடிய இளைஞன் புகையிரதத்தில் மோதி உயிரிழந்தார்.
மொரட்டுவ பொலிஸ் பிரிவில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்தது.
உயிரிழந்தவர் மஸ்கெலியாவில் வசிக்கும் எஸ்.மோகன்தாஸ் (28) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
யுவதியும் மஸ்கெலியா பிரதேசத்தில் வசிப்பவர். இவர்களுக்குள் சில காலமாக அறிமுகம் இருந்தாக பொலிஸார் தெரிவித்தனர்.
23 வயதுடைய யுவதி கட்டுபெத்த, மொரட்டுவையில் உள்ள கடையொன்றில் காசாளராக கடமையாற்றியதாகவும், இளைஞனும் மொரட்டுவைக்கு அருகில் உள்ள இடத்தில் பணிபுரிந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தன்று குறித்த இளைஞன், யுவதி வேலை செய்யும் கடைக்கு வந்து, அவரிடம் தனது காதலை தெரிவித்துள்ளார். ஆனால் அந்த யுவதி காதலை ஏற்க மறுத்ததால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது அந்த இளைஞன் கடை உரிமையாளரிடம் கழிப்பறைக்கு செல்ல அனுமதி கேட்டுள்ளார். கழிவறைக்குள் சென்ற இளைஞன், உடலில் தீவைத்துக் கொண்டு வெளியே ஓடிவந்து, அந்த யுவதியை பிடித்து இழுத்து கட்டியணைக்க முயன்றுள்ளார்.
எனினும், அங்கிருந்தவர்கள் துரிதமாக செயற்பட்டு, யுவதியை விடுவித்ததுடன், தீயை அணைக்கவும் முயன்றனர்.
ஆனால் இளைஞன் புகையிரத தண்டவாளத்தை நோக்கி ஓடிச் சென்று, எதிரே வந்த புகையிரதத்தில் மோதி உயிரிழந்தார்.
விபத்தில் தீக்காயங்களுக்கு உள்ளான யுவதி கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.