அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் அரச அச்சகக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள ஊழல் வழக்கு விசாரணையை எதிர்வரும் டிசம்பர் மாதம் 9 ஆம் திகதி நடத்துவதற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று ஒத்திவைத்துள்ளது.
2012 இல் வெகுஜன ஊடக அமைச்சராக செயற்பட்ட போது, ஒரு மாத கையடக்கத் தொலைபேசி கட்டணத்தை அரச அச்சகக் கூட்டுத்தாபன நிதியைப் பயன்படுத்தி செலுத்தி அரசாங்கத்திற்கு சட்டவிரோதமாக 230,984 ரூபாய் நஷ்டம் ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட இருவருக்கு எதிராக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் இந்த ஊழல் வழக்கைத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தமித் தொட்டவத்த முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, குற்றப்பத்திரிகையில் பல திருத்தங்களை கொண்டு வர அரசு தரப்பு எதிர்பார்ப்பதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு நீதிமன்றத்திற்கு அறிவித்தது. வழக்கு விசாரணைக்கு முந்திய நிலையில், குற்றப்பத்திரிகையில் திருத்தம் செய்ய அரசுத் தரப்பு நடவடிக்கை எடுப்பதற்கு எதிராக, பிரதிவாதி சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி கலிங்க இந்ததிஸ்ஸ ஆட்சேபனைகளை எழுப்பினார்.
2012 மார்ச் 15 முதல் 2012 ஏப்ரல் 14 வரையிலான காலக்கட்டத்தில் அமைச்சர் ரம்புக்வெல்ல, வெகுஜன ஊடகத்துறை அமைச்சராக கடமையாற்றிய போது, அரசாங்கத்திற்கு சட்டவிரோதமான நஷ்டத்தை ஏற்படுத்தியதன் மூலம், 2012 மார்ச் 15 முதல் 2012 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் பதவிவகித்த அரச அச்சகக் கூட்டுத்தாபன தலைவரை கையடக்கத் தொலைபேசி கட்டணத்தை செலுத்துமாறு தூண்டியதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு குற்றம் சுமத்தியுள்ளது.
அரச அச்சகக் கூட்டுத்தாபன முன்னாள் தலைவர் ஜயம்பதி பண்டார ஹீன்கெந்தவை குற்றச் செயலுக்கு உதவிய குற்றச்சாட்டில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு பெயரிட்டுள்ளது