வவுனியா நகரசபையை மாநகரசபையாக தரமுயர்த்தும் அறிவிப்பை வெளியிட்ட வர்த்தமானி அறிவிப்பில் வவுனியாவ என குறிப்பிடப்பட்டிருந்தது தவறான நடவடிக்கையென பிரதமர் தினேஷ் குணவர்த்தன ஏற்றுக்கொண்டார்.
அதிகாரிகள் சிலர் இவ்வாறு தவறாக நடந்துகொள்வதாக ஏற்றுக்கொண்ட பிரதமர், விரைவில் திருத்தம் செய்த வர்த்தமானி விரைவில்வெளியாகும் என்றும் உறுதியளித்துள்ளார்.
தமிழ் தேசிய கட்சிகளின் பிரதிநிதிகளுடன் நேற்று (23) நடந்த சந்திப்பில் இதனை தெரிவித்தார்.
இந்த சந்திப்பில், தேசிய சபையை அமைக்கும் நடவடிக்கைக்கு தமிழ் கட்சிகள் ஒத்துழைக்க வேண்டுமென பிரதமர் கோரிக்கை விடுத்தார்.
அரசு வாக்களித்த பல விடயங்களை நிறைவேற்றாத நிலையில், அரசின் நடவடிக்கைகளை ஆதரிக்க முடியாதென தமிழ் தேசிய கட்சிகள் வலியுறுத்தின.
கல்முனை பிரதேச செயலாளர் பிரிவில் கணக்காளர் நியமனம், அரசியல் கைதிகள் விடுதலை, குருந்தூர்மலை, கோணேச்சர் ஆலய விவகாரங்களை சுட்டிக்காட்டினர்.
அத்துடன், வவுனியா நகரசபையை தரமுயர்த்தும் வர்த்தமானியில் வவுனியாவ என குறிப்பிடப்பட்டுள்ளதை தமிழ் கட்சிகள் சுட்டிக்காட்டினர். இவை வேண்டுமென்றே செய்யப்படும் இனவாத நடவடிக்கைகள் என தமிழ் கட்சிகள் குறிப்பிட்டன.
அது தவறான நடவடிக்கை என ஏற்றுக்கொண்ட பிரதமர், அரசியல் நோக்கத்துடன் அப்படி செய்யவில்லையென்றும், வவுனியாவ என குறிப்பிட்டதை தான் அறிந்திருக்கவில்லையென்றும், சில அதிகாரிகள் அப்படி இனவாதமாக நடந்திருக்கக்கூடும் என்றும், அதை சரி செய்து, வவுனியா என குறிப்பிட்ட புதிய வர்த்தமானியை வெளியிடுவதாக பிரதமர் குறிப்பிட்டார்.