மாகாண சபை தேர்தலை எந்த முறைமையின் கீழ் நடத்துவது என்பது தொடர்பான இறுதி முடிவு, ஏப்ரல் 19 ஆம் திகதி இடம்பெறவுள்ள கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் என்று அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்துள்ளார்.
நேற்று கொழும்பில் ஊடகங்களிடம் பேசிய அமைச்சர், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையின் கீழ் கூட்டம் நடைபெறும் என்று கூறினார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் உள்ள பரிந்துரைகளை ஆய்வு செய்ய நியமிக்கப்பட்ட அமைச்சரவை உபகுழுவில், எஸ்.எம்.சந்திரசேனவும் அங்கம் வகித்தார்.
இந்த குழு, தமது அறிக்கையை நேற்று ஜனாதிபதியிடம் கையளித்தது.
அறிக்கை தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு, இந்த சம்பவம் தொடர்பான சட்ட நடவடிக்கைகள் சட்டமா அதிபரால் எடுக்கப்பட்டு வருவதாகவும், ஆழமான விசாரணைகள் மூலம் நீதியை உறுதி செய்வதன் முக்கியத்துவத்தை ஜனாதிபதி மீண்டும் வலியுறுத்தினார் என்றார்.
இதற்கிடையில் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தனவும் ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்தார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குற்றவாளிகள் மற்றும் பொறுப்பாளர்கள் அனைவரையும் தண்டிப்பதே அமைச்சரவை உபகுழுவின் பரிந்துரை என்று கூறினார்.
கடமைகளை புறக்கணித்த நபர்கள், அது அரச தலைவர்களாக இருந்தாலும் பொறுப்பேற்க வேண்டும் என்றும் கூறினார்.
தாம் அரசியல் பழிவாங்கலில் ஈடுபட எதிர்பார்க்கவில்லை, ஆனால் சட்டப்படி செயல்படுவார்கள் என்று அவர் கூறினார்.