டெல்லி கப்பிட்டல்ஸ் அணியின் இணை உரிமையாளர்களான ஜிஎம்ஆர் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தால், முன்னாள் இலங்கை கப்டன் மஹேல ஜெயவர்தன உடனடியாகப் பொறுப்பேற்கும் வகையில் கிரிக்கெட் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தனது புதிய பொறுப்பில், ஜிஎம்ஆர் ஸ்போர்ட்ஸ் பெரும்பான்மை அல்லது கட்டுப்பாட்டுப் பங்குகளைக் கொண்டுள்ள ஐஎல்டி20 தொடரில் பங்கேற்கும் துபாய் கப்பிட்டல்ஸ் மற்றும் ‘தி ஹன்ட்ரட்’ தொடரில் பங்கேற்கும் சதர்ன் பிரேவ் உள்ளிட்ட அனைத்து அணிகளின் கிரிக்கெட் செயல்பாடுகளையும் ஜெயவர்தன மேற்பார்வையிடுவார். மேலும், அவர் ஹாம்ப்ஷயர் கிரிக்கெட்டுடனும் இணைந்து பணியாற்றுவார்.
ஒவ்வொரு அணியின் ஆதரவுப் பணியாளர்களுடன் நெருக்கமாகப் பணியாற்றுவதுடன், கிரிக்கெட் உத்தி, அணியின் செயல்திறன் மற்றும் திறமை மேம்பாடு ஆகியவற்றை மேற்பார்வையிடுவதும் அவரது பொறுப்புகளில் அடங்கும்.
இந்த நியமனத்தின் மூலம், 2027 மற்றும் 2028 சீசன்களில் மகளிர் பிரீமியர் லீக்கில் (WPL) டெல்லி கப்பிட்டல்ஸ் மகளிர் அணியையும் ஜெயவர்தன மேற்பார்வையிடுவார்.
ஜிஎம்ஆர் ஸ்போர்ட்ஸ் மற்றும் ஜேஎஸ் டபிள்யூ குழுமம் இணைந்து டெல்லி கப்பிட்டல்ஸ் ஆண்கள் மற்றும் மகளிர் அணிகளைச் சொந்தமாகக் கொண்டுள்ளன. இவ்விரு குழுக்களும் இரண்டு ஆண்டு சுழற்சி முறையில் செயல்பாட்டுக் கட்டுப்பாட்டைப் பகிர்ந்து கொள்கின்றன. 2027 மற்றும் 2028-ஆம் ஆண்டுகளில் ஜே.எஸ்.டபிள்யூ குழுமம் ஆடவர் ஐபிஎல் அணியை நிர்வகிக்கும், அதே காலகட்டத்தில் ஜி.எம்.ஆர் ஸ்போர்ட்ஸ் மகளிர் அணியை மேற்பார்வையிடும்.
2026 ஐபிஎல் சீசனுக்குப் பிறகு மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து விலகியதைத் தொடர்ந்து ஜெயவர்தன டெல்லி கப்பிட்டல்ஸ் அணியில் இணைகிறார். இதற்கு முன்பு அவர் 2012 மற்றும் 2013-ஆம் ஆண்டுகளில் டெல்லி கப்பிட்டல்ஸ் அணிக்காக வீரராக விளையாடியுள்ளார்.
அவரது நியமனத்தைத் தொடர்ந்து, ஜி.எம்.ஆர் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் தனது முன்னாள் கிரிக்கெட் இயக்குனர் வேணுகோபால் ராவ் மற்றும் பந்துவீச்சு பயிற்சியாளர் முனாஃப் படேல் ஆகியோரை விடுவித்துள்ளது.
ஜெயவர்தனவின் முதல் பணி, நவம்பர் 21-ஆம் திகதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கும் ஐ.எல்.டி20 தொடரில் துபாய் கப்பிட்டல்ஸ் அணியுடன் இருக்கும். அவரது முன்னாள் இலங்கை அணி வீரரான லசித் மலிங்கவும் அந்த அணியின் வேகப்பந்துவீச்சு பயிற்சியாளராக இணைந்துள்ளார்.
அவரது அடுத்த பணி, ஜனவரி 7-ஆம் திகதி இந்தியாவில் தொடங்கவிருக்கும் மகளிர் ஐபிஎல் தொடராகும். டெல்லி கப்பிட்டல்ஸ் மகளிர் அணி இதுவரை நடைபெற்ற இத்தொடரின் நான்கு பதிப்புகளிலும் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது.
அணியின் தற்போதைய பலங்களை மேலும் வலுப்படுத்தவும், நிலைத்தன்மையை மேம்படுத்தவும், WPL பட்டத்திற்காகப் போட்டியிட அந்த அணிக்கு உதவவும் ஆவலுடன் இருப்பதாக ஜெயவர்தன கூறினார்.




