ஹொரணைப் பகுதியில் கோடீஸ்வர வர்த்தகர் ஒருவரைச் சுட்டுக் கொல்வதற்காக, அவரது வீட்டின் அருகே பதுங்கியிருந்த பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்த இரு கூலிப்படையினர், நேற்று முன்தினம் இரவு (19ஆம் திகதி) பேலியகொட குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டனர்.
இவர்களிடமிருந்து T-56 ரகத் துப்பாக்கி ஒன்றும் கைப்பற்றப்பட்டது. பேலியகொட குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் துரிதமான நடவடிக்கையினால், குறித்த வர்த்தகர் உயிர் பிழைத்தார்.
வர்த்தகரைத் திட்டமிட்டு படுகொலை செய்ய முயன்ற இந்த இரு கூலிப்படையினரும், ஹொரணைப் பகுதியில் உள்ள இரு வெவ்வேறு வீடுகளில் பதுங்கியிருந்தபோது கைது செய்யப்பட்டனர்.
வர்த்தகர் தனது வாகனத்தில் வீட்டிற்கு வரும்போது, அவரை வழிமறித்துச் சுட்டுக் கொல்லுமாறு இந்த கூலிப்படையினருக்குப் பணிப்புரை விடுக்கப்பட்டிருந்தது விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. வர்த்தகத் தகராறு ஒன்றின் காரணமாக, ‘மது’ என்பவர் ‘வெல்ல சரங்க’ எனப்படும் பாதாள உலகத் தலைவனிடம் இந்த படுகொலை ஒப்பந்தத்தை வழங்கியுள்ளார்.
கைது செய்யப்பட்ட இருவரும் மட்டக்குளியைச் சேர்ந்தவர்கள் என்றும், இவர்கள் ‘வெல்ல சரங்க’வின் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர், சில மாதங்களுக்கு முன்பு வத்தளையில் நடைபெற்ற பிறந்தநாள் விழாவொன்றில், ரோஷன் என்பவரைச் சுட்டுக் கொல்ல முயன்ற பாதாள உலகக் குழுவைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது.
பொலிஸாரின் தகவல்படி, இந்த படுகொலை ஒப்பந்தமும் ‘வெல்ல சரங்க’வினாலேயே இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட T-56 ரகத் துப்பாக்கி, 15 தோட்டாக்கள் மற்றும் அதன் மகசின் ஆகியவற்றை அவர்களுக்கு வழங்கியது யார் என்பது குறித்து மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
‘வெல்ல சரங்க’ எனப்படும் இந்த பாதாள உலகத் தலைவன் தற்போது துபாயில் பதுங்கியிருந்து, அங்கிருந்தபடியே இலங்கையில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் பல்வேறு பாதாள உலகச் செயல்களில் ஈடுபட்டு வருவதாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.




