அரசாங்கத்தினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள “அரசைப் பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கும் சட்டமூலம்” (Protection of the State from Terrorism Bill) தொடர்பாகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான விசாரணை இன்று (20) இலங்கை உயர் நீதிமன்றத்தில் ஆரம்பமாகியுள்ளது.
ஊடகவியலாளர்களான எம்.எப்.எம்.பஸீர் மற்றும் தரிந்து உடுவரகெதர சார்பாக கௌரி சங்கரி சட்ட நிறுவனத்தின் சட்டத்தரணி தர்மராஜா தர்மஜா தாக்கல் செய்த வழக்கானது முதலாவது விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. குறித்த சட்டமூலத்தின் அரசியலமைப்புச் சட்ட ஏற்புடைமையைச் சவாலுக்கு உட்படுத்தியே இவ்வழக்குகள்; தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சுரசேன மற்றும் நீதியரசர்களான அச்சல வெங்கப்புலி, சம்பத் அபேகோன் ஆகியோர் அடங்கிய மூவர் கொண்ட நீதியரசர் குழாம் முன்னிலையில் இந்த மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன.
முன்மொழியப்பட்டுள்ள சட்டமூலத்தின் சில ஏற்பாடுகள் அரசியலமைப்பில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை மீறுவதாக மனுதாரர்கள் தமது மனுக்களில் சுட்டிக்காட்டியுள்ளனர். குறிப்பாக, சட்டமூலத்தில் பயங்கரவாதம் தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள பரந்த வரைவிலக்கணம், கைது மற்றும் தடுப்புக்காவல் அதிகாரங்கள், நீதித்துறை மேற்பார்வை மற்றும் கருத்துச் சுதந்திரம் தொடர்பான ஏற்பாடுகள் குறித்து ஆட்சேபனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்தச் சட்டமூலத்தின் சில ஏற்பாடுகள் அரசியலமைப்புக்கு முரணானவை எனத் தீர்மானிக்குமாறும், அவை சட்டமாக்கப்படுவதற்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை மற்றும் மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு அவசியமா என்பது தொடர்பில் தீர்மானம் வழங்குமாறும் மனுதாரர்கள் கோரியுள்ளனர்.
தற்போதைய பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்திற்குப் பதிலாகக் கொண்டுவரப்படவுள்ள இந்தப் புதிய சட்டமூலம் தொடர்பான வழக்கு விசாரணைகள், அடிப்படை உரிமைகள், ஊடகச் சுதந்திரம் மற்றும் சட்டத்தின் ஆட்சி ஆகிய விடயங்களில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ள மனுக்களில் முன்வைக்கப்பட்டுள்ள வாதங்கள், புதிய சட்டமூலத்தின் அரசியலமைப்புச் செல்லுபடியாகும் தன்மை தொடர்பான விவாதத்தில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளன. சட்டமூலத்தின் எந்தெந்த பிரிவுகள் அரசியலமைப்புக்கு முரணானவை, அவற்றை நிறைவேற்றுவதற்கு என்ன நடைமுறைகள் அவசியம் என்பன தொடர்பில் உயர் நீதிமன்றத்தின் தீர்மானம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்.
இம்மனு சார்பில் சட்டத்தரணி தர்மராஜா தர்மஜாவின் ஆலோசனைக்கு அமைய சட்டத்தரணிகளான சிபான் மஹ்ரூப், சாலினி பெர்ணான்டோ, நெஹன்சா வீரசிங்க, ஹோசதி ஹப்பு ஆரச்சி, அழகரத்னம் ஜினோசன், ஆகியோருடன் சிரேஸ்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் ஆஜராகினார் என்பதும் குறிப்பிடத்தக்;கது.
Date:
Share post:




