முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் பாரியாரான ஷிராந்தி ராஜபக்ஷ, நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்க பிறிதொரு தினத்தை கோரியுள்ளார்.
அவர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி ஒருவர் கடிதம் மூலம் அப்பிரிவுக்கு இதனை அறியப்படுத்தியுள்ளார்.
மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக அவர் வெளிநாடு சென்றுள்ளதால் இச்சமயத்தில் அப்பிரிவில் ஆஜராகுவதற்கான வாய்ப்பில்லை எனவும், நாடு திரும்பியவுடன் அதில் முன்னிலையாகி வாக்கு மூலம் வழங்க தயாராக இருப்பதாகவும் அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிரிலிய சவிய நிதியத்துடன் தொடர்புடைய கணக்கில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி முறைகேடுகள் மற்றும் பணப் பரிவர்த்தனைகள் குறித்து வாக்குமூலம் ஒன்றைப் பெற்றுக்கொள்வதற்காக நேற்று முன்தினம் (24) பொலிஸ் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அழைக்கப்பட்டிருந்தார்.
இந்த விவகாரம் எழுப்பப்பட்டதும், அவர் மருத்துவ சிகிச்சையென சிங்கப்பூர் பறந்துவிட்டார். ஆனால் அவர் சிங்கப்பூரில் உல்லாசமாக சுற்றித்திரியும் புகைப்படங்கள் வெளியாகி, அவர் விசாரணையை தவிர்க்க மருத்துவ சிகிச்சை நாடகமாடுகிறார் என சமூக ஊடகங்களில் விமர்சனங்கள் கிளம்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.




