தமிழ், முஸ்லிம் கட்சிகளின் கூட்டமைப்பை கலைத்துவிட்டு ஒவ்வொருவரும் தங்கள் அரசியல் பணிகளை முன்னெடுக்க வேண்டும் – அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதிச் செயலாளர் நாயகம் சட்டத்தரணி அன்ஸில்

Date:

கலாசார ஆடை விவகாரத்தில் தமிழ், முஸ்லிம் கட்சிகளின் கூட்டமைப்பு உடனடியாக நேர்மையான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்; இல்லை என்றால் அந்தக் கூட்டமைப்பை கலைத்துவிட்டு ஒவ்வொருவரும் தங்கள் அரசியல் பணிகளை முன்னெடுக்க வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதிச் செயலாளர் நாயகம், அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினரும் முன்னாள் தவிசாளருமான சட்டத்தரணி எம்.ஏ. அன்ஸில் தெரிவித்துள்ளார்.

அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் ஏ.சி. நியாஸ் இம்மாத சபை அமர்வில் முன்வைத்த பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், நான் ஒரு கட்சியினுடைய பிரதிச் செயலாளர் நாயகம். எங்களுடைய கட்சியும் இந்த ஆறு தமிழ் பேசும் கட்சிகளில் அங்கத்துவம் வகிக்கிறது. அதைக்கூட தமிழ் முஸ்லிம் கட்சிகள் என்று சொல்ல முடியாது. தமிழ் பேசும் கட்சிகள் என்றே அழைக்கிறார்கள். அதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். இது என்னுடைய தனிப்பட்ட கருத்தாகத்தான் தந்துள்ளேன்.

தமிழ், முஸ்லிம் ஆறு கட்சிகளின் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது எதற்காக? இந்த கல்முனை விடயம் நேரடியாக தமிழர்களிடமும் முஸ்லிம்களிடமும் சம்பந்தப்பட்ட விடயம். வேறு சிங்கள சமூகத்திற்கோ அல்லது சிங்கள அரசியல்வாதிக்கோ நேரடியாகத் தொடர்பில்லை. அவர்கள் அமைச்சர்கள், அரசாங்கம் என்பதை தவிர.

ஆகவே ஒரு பிரச்சினை எங்களுக்குள்ளே வருகின்றபோது, இவற்றை உடனடியாகத் தீர்ப்பதற்கு இந்தக் கூட்டமைப்பு ஏன் முனையவில்லை? இந்த கூட்டமைப்பு உடனடியாக செய்திருக்க வேண்டியது சுகாதார அமைச்சரையோ, ஜனாதிபதியையோ சந்தித்து இருக்க வேண்டும். முஸ்லிம்கள், தமிழர்கள் நாங்கள் ஒற்றுமையாக இருக்கிறோம். கலாச்சாரங்களுக்கு எந்தப் பிரச்சினையுமில்லை. அவர்களுடைய கலாச்சார ஆடையை அவரவர் அணியட்டும் என்ற செய்தியை அந்தச் சுகாதார அமைச்சருக்குத் தமிழ், முஸ்லிம் தலைவர்களாக ஒன்றிட்டுப் போய் சொல்லி இருந்தால் இன்று இந்தப் பிரச்சினை வந்திருக்காது.

ஆனால் பொதுநிலையில் இருக்கும் தமிழர்களுடைய வாக்கு போய்விடும் என்று பயப்படுகின்ற தமிழ் தலைவர்களோடு முஸ்லிம் தலைவர்களுக்கு கூட்டுத்தேவை இல்லை. அதேபோன்று கொதிநிலையில் இருக்கும் முஸ்லிம்களுடைய வாக்கு போய்விடும் என்று பயப்படுகின்ற, திராணி இல்லாத, முள்ளந்தண்டு இல்லாத முஸ்லிம்களுடைய கூட்டு தமிழ் தலைவர்களுக்குத் தேவையில்லை.

இந்தச் சந்தர்ப்பத்தில் களத்தில் இருக்கிற இனவாதம் தலைக்கு உச்சேறி இருக்கின்ற தமிழ் சகோதரர்களுடைய வாக்கு எங்களை விட்டுப் போய்விடும் என்று பயப்படுகின்ற சுமந்திரன் ஆக இருந்தாலும் ஒன்றுமில்லை. சாணக்கியன் ஆக இருந்தாலும் ஒன்றுமில்லை. அம்பாறையில் இருக்கின்ற கோடிஸ்வரன் ஆக இருந்தாலும் ஒன்றுமில்லை. அவர்களோடு கூட்டு முஸ்லிம் தலைவர்களுக்கும் கட்சிகளுக்கும் தேவையில்லை.

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை தமிழ் வைத்தியசாலை, கல்முனை தெற்கு ஆதார வைத்தியசாலை (அஷ்ரப் ஞாபகார்த்த முஸ்லிம் வைத்தியசாலை)முஸ்லிம் வைத்தியசாலை. இப்படியா நாங்கள் செய்வது? அதையும் ஒரு இனவாதமாகப் பேசுகிறார்கள்.

கல்முனை தெற்கு ஆதார வைத்தியசாலை உருவாக்கப்பட்ட வரலாறு எல்லாருக்கும் தெரியும். எங்களுடைய பிரதேசத்தினுடைய பொது வைத்தியசாலையாக வந்திருக்க வேண்டிய வைத்தியசாலை கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை தான். ஆனால், எப்போது அதற்கு மாற்றாக ஒரு வைத்தியசாலை தேவைப்பட்டது? மட்டுமில்லாது எப்போது எங்களுக்கு மட்டக்களப்பு வந்தாறுமூலை கிழக்கு பல்கலைக்கழகத்துக்கு மாற்றாக ஒரு தென்கிழக்கு பல்கலைக்கழகம் தேவைப்பட்டது ?

எங்களுக்குச் சுதந்திரமான நடமாட்டம் செய்ய முடியவில்லை. கல்முனையில் இருக்கின்ற மக்கள், இந்தப் பிரதேசத்தில் இருக்கின்ற மக்கள், கல்முனை கடற்கரை பள்ளிவாசலைத் தாண்டிச் செல்வதற்கு முடியும் என்று நினைக்கவில்லை. உயிர் பயம், நோயைக் குணப்படுத்த உயிரைப் பறிகொடுக்க என்ற காலங்களும் இருந்தது. அதனால் மாற்றுத் திட்டங்களைப் பற்றி யோசித்து அந்த வைத்தியசாலைகள் தரம் உயர்த்தப்பட்டன. அதேபோன்று தென்கிழக்கு பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்பட்டன. அது தேவை நிமித்தமானது.

எங்களுக்குப் பயணம் செய்யக்கூட முடியாதிருந்த நிலைமை. கல்வியை தென்கிழக்கு பல்கலைக்கழகம் உருவாக்கப்படுவதற்கு முன்பாக கிழக்கு பல்கலைக்கழகத்தில் இருந்த மாணவர்கள் கொழும்புக்குத்தான் மாற்றப்பட்டார்கள். பிறகு கிழக்கில் எங்களுக்குத் தென்கிழக்கு பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது. நாம் இப்போது இருக்கின்ற சமாதான சூழ்நிலையை வைத்துக்கொண்டு இப்போது பேச முடியாது. அப்போது இருந்த நிலைமை வேறு. ஆகவே கண்ணை மூடிக்கொண்டு இங்கே எல்லோரும் இனவாத சந்தர்ப்பம் கிடைக்கின்ற போது இனவாதிகளாக மாறிப் பேசுகின்ற நிலைமைக்கு மாற்றமாக, இதிலே அரசாங்கம் உடனடியாகச் செயல்பட வேண்டும்.

அரசின் தீர்மானம் அவர்களை இடமாற்றம் செய்வதுதான் என்றிருந்தால், இந்த அரசாங்கமும் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையை தமிழ் வைத்தியசாலை என்றும், கல்முனை தெற்கு ஆதார வைத்தியசாலையை முஸ்லிம் வைத்தியசாலை என்றும் ஏற்றுக்கொள்கின்ற அரசாங்கமாகத்தான் எங்களால் கருத முடியும். இது மிகத் தவறானது. அதைச் செய்ய முடியாது. அதற்கு மாற்றாக அரசாங்கம் சரியான தீர்மானத்தை மேற்கொள்ள வேண்டும். அரசாங்கம் சரியான தீர்மானத்தை மேற்கொள்கின்ற விடயத்தில் தமிழ், முஸ்லிம் கட்சிகளின் கூட்டமைப்பு தமிழ், முஸ்லிம் தலைவர்கள் நேர்மையான தீர்மானம் எடுக்க வேண்டும்.

அந்த நேர்மையான தீர்மானம் கலாச்சார ஆடைகளை அணிவதற்கான இந்த நாட்டினுடைய அரசியலமைப்பு சட்டத்தில் வழங்கப்பட்டிருக்கின்ற உரிமையை எல்லோரும் ஏற்றுக்கொள்கிறோம். அது தமிழர்களாக இருந்தாலும் சரி, சிங்களர்களாக இருந்தாலும் சரி, முஸ்லிம்களாக இருந்தாலும் சரி, அவர்களுடைய அந்தச் சீருடைக்கு மேலாக மேலதிகமாக அவர்கள் தங்களுடைய கலாச்சார ஆடைகளை அணிவதற்கு எல்லா உரிமைகளும் இருக்கிறது என்பதை பகிரங்கமாக அரசாங்கத்தின் மீது அழுத்தம் தர அவர்கள் தயாராக இல்லாவிட்டால், இந்த ஆறு கட்சிகளின் கூட்டமைப்பை கலைத்துவிட்டு தங்கள் தங்களுடைய வேலைகளை அவர்கள் பார்க்கட்டும் என்ற செய்தியை இந்த இடத்திலே நான் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.- என்றார்

spot_imgspot_img

More like this
Related

இமாம் கஸ்ஸாலி வித்தியாலய மாணவர்களுக்கு அமீர் மேர்சா பொது நூலகத்தின் இலவச அங்கத்துவம் வழங்கி வைப்பு

நிந்தவூர் இமாம் கஸ்ஸாலி வித்தியாலய மாணவர்களுக்கு நிந்தவூர் அமீர் மேர்சா பொது...

“அனுரவே” எம்மை சொந்த நிலங்களில் வாழவிடு – மயிலிட்டி மக்களின் 18 ஆவது வாரக் கண்ணீர்ப் போராட்டம்!

வலிகாமம் வடக்கில் பல தசாப்தங்களாக இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள தமது சொந்தக்...

இறுதிநாளாக வாக்குமூலம்

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களிடம் இறுதிநாளாக வாக்குமூலம் பதிவு காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகத்தினரால் காணாமல்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்