உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை நீட்டிப்பது தொடர்பான முன்மொழியப்பட்ட அரசியலமைப்புத் திருத்தம் குறித்து ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவுடன் நடத்திய சந்திப்பின் முழுமையான காணொளிப் பதிவுகள் தங்களுக்கு இன்னும் கிடைக்கவில்லை என்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த சந்திப்பு பல கட்டங்களைக் கொண்டிருந்ததாகவும், முன்மொழியப்பட்ட திருத்தம் மற்றும் நீதித்துறை சுதந்திரத்தில் அதன் சாத்தியமான தாக்கம் குறித்த சங்கத்தின் கவலைகளை இலங்கை சட்டத்தரணிகள் சங்க தலைவர் ராஜீவ் அமரசூரிய கோடிட்டுக் காட்டியதில் இருந்து இது தொடங்கியதாகவும் கூறியது.
சம்பந்தப்பட்ட தரப்பினருடன் போதுமான கலந்தாலோசனை இல்லாமல், நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை நீட்டிக்கும் இந்த முன்மொழியப்பட்ட திட்டத்தை அவசரப்படுத்தக் கூடாது என்று அமரசூரிய வலியுறுத்தியதாக தெரிவித்தது.
அதனைத் தொடர்ந்து, இலங்கை சட்டத்தரணிகள் சங்க பிரதித் தலைவர் ரீன்சி அர்சகுலரத்ன, மேலும் சில கருத்துக்களைத் தெரிவித்தார். அதே நேரத்தில், முன்மொழியப்பட்ட திருத்தம் நீதித்துறை சுதந்திரத்தை எவ்வாறு பாதிக்கக்கூடும் என்பது குறித்த கவலைகளை ஓய்வுபெற்ற பேராசிரியர் சாவித்ரி குணசேகர விளக்கினார். இலங்கை சட்டத்தரணிகள் சங்க பல முன்னாள் தலைவர்களும் இந்த கலந்துரையாடலில் பங்களித்தனர்.
பின்னர், ஜனாதிபதி அரசாங்கத்தின் நிலைப்பாட்டை விளக்கினார். அதனைத் தொடர்ந்து, அமரசூரிய மேலும் சில கருத்துக்களைத் தெரிவித்து, அடுத்தகட்ட நடவடிக்கைக்கான வழியையும் முன்மொழிந்தார் என்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கூறியது.
இருப்பினும், அமரசூரியாவின் ஆரம்ப சமர்ப்பிப்பின் ஒலிப்பதிவு மட்டுமே இதுவரை தங்களுக்குக் கிடைத்துள்ளதாகவும், அந்த ஒலிப்பதிவின் கணிசமான பகுதி தெளிவற்று அல்லது சிதைந்து காணப்படுவதாகவும் சங்கம் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி செயலகத்திற்கு ஓகஸ்ட் 14 திகதியிட்ட கடிதத்தில், கூட்டத்தின் முழுமையான, திருத்தப்படாத காணொளிப் பதிவை, அனைத்துத் தலையீடுகள், அவதானிப்புகள், பதில்கள் மற்றும் இறுதிக் கருத்துக்கள் உட்பட, கிடைக்கக்கூடிய சிறந்த ஒலி மற்றும் காணொளித் தரத்துடன் வழங்குமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கோரியுள்ளது.
இந்தக் கோரிக்கைக்குப் பதிலளித்த ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு, இலங்கை சட்டத்தரணிகள் சங்க தலைவரின் உத்தியோகபூர்வ உரைகளின் திருத்தப்படாத ஒலிப்பதிவு ஓகஸ்ட் 12 அன்று வழங்கப்பட்டதாகத் தெரிவித்தது.
தேவையான உத்தியோகபூர்வ நடைமுறைகளுக்கு உட்பட்டு, பங்கேற்பாளர்களின் மீதமுள்ள கருத்துக்கள் மற்றும் தலையீடுகளின் பதிவுகள் “சரியான நேரத்தில், கூடிய விரைவில்” வழங்கப்படும் என்றும் அது மேலும் கூறியது.
பலமுறை கோரிய போதிலும், மீதமுள்ள பதிவுகள் இன்னும் கிடைக்கவில்லை என்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கூறியுள்ளது.
உச்ச நீதிமன்றம் மற்றும் மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை உயர்த்துவதற்காக அரசாங்கம் முன்மொழிந்த அரசியலமைப்புத் திருத்தம் குறித்த தொடர் விவாதங்களுக்கு மத்தியில் இந்த ஒலிப்பதிவுகள் தொடர்பான சர்ச்சை எழுந்துள்ளது.




