மட்டக்களப்பு பாலமீன்மடு மீனவர் எழுச்சி கிராமம் 50 வீட்டுத் திட்டத்தில் 30 குடும்பங்கள் அடிப்படை வசதிகளான மலசல கூடம், குடிநீர், மின்சாரம் இல்லாமல் கடந்த 20 வருடமாக வாழ்ந்து வரும் மக்களின் அவலங்களை போக்குமாறு ஜனாதிபதி மற்றும் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருக்கு அவசரமாக கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாக ஈ.பி.டி.பி கட்சியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அந்தனிசில் ராஜ்குமார் தெரிவித்தார்.
மட்டக்களப்பு பாலைமீன் மடுவில் உள்ள அவரது காரியாலயத்தில் இன்று புதன்கிழமை (29) இடம்பெற்ற வாராந்த ஊடக மாநாட்டில் கட்சியின் மாவட்ட இணைப்பாளர் சிவானந்தராஜா, மற்றும் ஒருங்கிணைப்பாளர் அந்தனிசில் ராஜ்குமார் கலந்து கொண்ட போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்த மீனவர் எழுச்சி கிராமாக அமைக்கப்பட்ட அந்த காணியில் உல்லாச விடுதி ஒன்று நிர்மாணிப்பதற்காக 2014ம் ஆண்டு அப்போது இருந்த பிரதேச செயலாளர் ஒரு தனிநபருக்கு குத்தகைக்கு வழங்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு அதற்கான அனுமதி வழங்கப்பட்டு இருந்தது.
இதன்போது பாலைமீன் மடுவில் உள்ள பொது நல அமைப்புகள் ஆலய நிர்வாகம் அதற்கு எதிர்த்து அதனை தடை செய்ய வேண்டும் என அப்போது இருந்த ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வந்ததையடுத்து 2015ம் ஆண்டு அனுமதி வழங்கிய பிரதேச செயலாளரால் அது இரத்து செய்யப்பட்டது.
இன்று அந்த மக்களுக்கு காணி ஆவணங்கள் வழங்காமல் இது அனர்த்த வலயமாக அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர். எனவே அந்த இடம் ஹோட்டல் கட்ட அப்போது அனர்த்த வலயம் இல்லை அனுமதி வழங்குகிறார்கள் அந்த ஊரிலே பிறந்த காணி இல்லாத மக்கள் குடியிருப்பது அனர்த்த வலயமா?
எனவே ஹோட்டலுக்கு வழங்கப்பட்ட காணியை ரத்து செய்ததன் காரணத்தினால் அந்த மக்களை பழி தீர்ப்பதற்கு அனர்த்த வலயமாக பிரகடனப்படுத்தி அப்போதைய பிரதேச செயலாளர் மோசடி ஒன்றை செய்துள்ளார்.
இருந்தபோதும் இந்த மீனவர் எழுச்சி கிராமமானது கடலில் இருந்து 120 மீற்றருக்கு அப்பால் இருக்கிறது இவர்கள் அடிப்படை வசதிகளான குடிநீர் மலசல கூடம் மின்சாரம் இல்லாமல் வாழ்ந்து வருகின்றனர் இவர்களுக்கு அரச சார்பற்ற நிறுவனங்கள் அந்த அடிப்படை வசதிகளை செய்துதர முன்வந்தாலும் அவர்களுக்கு காணி அனுமதி பத்திரம் இல்லாத போதும் அதற்கான அனுமதியை கிராம சேவகர் உத்தியோகத்தரிடம் கோரினால் அதற்கு அவர் அனுமதி வழங்க மறுத்து வருகிறார்.
ஆகவே நீண்ட காலமாக குடியிருக்கும் இந்த 30 குடும்பங்களுக்கு காணி அனுமதிப்பத்திரங்கள் வழங்குங்கள் அல்லது மாற்றுக் காணிகளை வழங்குங்கள்.
ஏழைகள் காணி இல்லை என 10 சே; காணியை அடைத்தால் சட்டம் வெகு வேகமாக அவர்கள் மீது பாயும் அதே நேரத்தில் சண்டியர்களும் அரசியல் செல்வாக்கு உள்ளவர்கள் பணபலம் படைத்தவர்கள் காணிகளை அடாத்தாக பிடித்து விற்பனை செய்யும் போது சட்டங்கள் அவர்களுக்கு எதிராக பாய்வது மிகவும் குறைவு எனவே பணக்காரர்களுக்கு ஒரு சட்டமும் ஏழைகளுக்கு ஒரு சட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது இது வன்மையாக கண்டிக்கின்றோம்.
இந்த மக்கள் இரும்பு பரல்களில் கிணறு அமைத்து அதில் இருந்து தண்ணீரை எடுத்து தான் குடிக்கின்றனர். இது ஒரு மோசமான மனிதாபிமானமற்ற செயல் சம்பந்தப்பட்ட அதிகாரிகளே இரும்பு பெரலில் பதித்த குடிநீரை உங்களால் ஒரு நாள் குடிக்க முடியுமா?
எனவே மாவட்ட அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர் கேட்டுக் கொள்வது இந்த மக்களின் அவல நிலையை போக்குவதற்காக உடனடியாக கள விஜயம் மேற்கொண்டு உடன் நடவடிக்கை எடுக்கவும்
மாவட்டதிலுள்ள அரசியல்வாதிகள் மக்களின் நலனில் அக்கறை கொள்வதில்லை அவர்கள் தேர்தல் காலம் வரும்போது இறப்பு வீடுகள் ஆலயங்கள், திருமண வீடுகளுக்கு செல்வார்கள்.
அதேபோன்று தேர்தல் வரும் போது இந்த அரசியல்வாதிகள் கிராமங்களை தேடி அலை அலையாக வருவார்கள் தேர்தல் முடிந்த பின்னர் அந்த மக்கள் இருக்கிறார்களா? என நினைத்து பார்க்க மாட்டார்கள் எனவே குடிநீர் அற்று இருக்கின்ற அந்த கிராமத்துக்கு மட்டு மாநகர சபை ஒரு தண்ணீர் பரல் ஒன்றை வைத்து சுத்தமான குடிநீரை வழங்க முன்வர வேண்டும் என்பதுடன் இந்த மக்கள் நலனில் கருத்தாக ஈ.பி.டி.பி இருக்கும் வாராந்த ஊடக சந்திப்பில் இதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது உன்னிப்பாக கவனிக்கும் என்றர்.




