உயர்தர அனுமதி அட்டை திருத்தம் ஆகஸ்ட் 3 வரை திறந்துள்ளது
2026 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர (G.C.E. A/L) பரீட்சைக்குத் தோற்றவுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது அனுமதி அட்டைகளில் (Admission Card) உள்ள தகவல்களில் திருத்தங்களை ஆகஸ்ட் 3 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணி வரை இணையவழியில் மேற்கொள்ள முடியும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்தக் காலக்கெடு எந்தவொரு காரணத்திற்காகவும் நீடிக்கப்படமாட்டாது என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.
2026 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை ஆகஸ்ட் 10 முதல் செப்டம்பர் 5 வரை நாடளாவிய ரீதியில் அமைக்கப்பட்டுள்ள 2,532 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளது.
பாடசாலை மாணவர்களின் அனுமதி அட்டைகள் சம்பந்தப்பட்ட வலயக் கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. பாடசாலை அதிபர்கள், தங்களது வலயங்களில் பரீட்சைகளுக்குப் பொறுப்பான பிரதி அல்லது உதவி கல்விப் பணிப்பாளரிடமிருந்து அவற்றைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தனியார் விண்ணப்பதாரர்களின் அனுமதி அட்டைகள், அவர்கள் வழங்கியுள்ள தனிப்பட்ட முகவரிகளுக்கு தபால் மூலம் அனுப்பப்பட்டுள்ளன.
பாடசாலை விண்ணப்பதாரர்கள் அனுமதி அட்டையில் திருத்தம் மேற்கொள்ள வேண்டுமெனில், பாடசாலை அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல் மூலம் பரீட்சைகள் திணைக்களத்தின் இணையதளத்தில் உள்நுழைந்து தேவையான திருத்தங்களைச் செய்யலாம்.
தனியார் விண்ணப்பதாரர்கள் தங்களது தேசிய அடையாள அட்டை (NIC) எண்ணை பயன்படுத்தி அதே இணையதளத்தின் மூலம் திருத்தங்களை மேற்கொள்ள முடியும்.
மேலும் தகவல்களுக்கு 1911 என்ற உதவி இலக்கத்தையோ, 011 2784208, 011 2784537 ஆகிய தொலைபேசி இலக்கங்களையோ தொடர்புகொள்ளலாம். அதேபோல் 011 2784422 என்ற தொலைநகல் இலக்கத்திற்கோ அல்லது gcealexamsl@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ தொடர்புகொள்ளலாம்.




