அதிகாரமற்று கூடும் தலைவர்கள்; உலமா கட்சித் தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் சாடல்

Date:

நீண்டகாலமாகப் பல்வேறு ஆட்சிகளில் அங்கம் வகித்து, அதிகாரத்தில் இருந்த அரசியல் தலைவர்கள், தற்போது தங்களது பலத்தை இழந்த பின்னர் ஒன்றிணைந்து கூட்டணி அமைப்பது குறித்து, மக்கள் மத்தியில் பெரும் விமானங்களை ஏற்படுத்தியுள்ளதுடன், அவர்களின் நம்பிக்கையையும் பெறாது என்று உலமா கட்சியின் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார்.
அதிகாரத்தில் இருந்தபோது மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்காக ஒற்றுமைப்பட்டு செயற்படாத இவர்கள், இப்போது சுயலாபங்களுக்காக கூட்டணி அமைப்பதை மக்கள் எவ்வாறு ஏற்றுக்கொள்வார்கள் என்று கேட்க விரும்புகிறேன்.
இது குறித்து இன்று (14) அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
ரவூப் ஹக்கீம், ரிசாத் பதியுதீன், மனோ கணேசன், ஜீவன் தொண்டமான் மற்றும் இலங்கைத் தமிழரசு கட்சியின் முக்கிய பிரமுகர்கள் போன்றோர் நீண்டகாலமாக அரசாங்கங்களில் அமைச்சர்களாகவும், செல்வாக்குமிக்க அதிகார மையங்களாக இருந்த அந்தப் பொற்காலத்தில், தமிழ் பேசும் மக்களின் ஒட்டுமொத்தப் பிரச்சினைகளுக்காக இவர்கள் ஏன் ஒன்றிணைந்து குரல் கொடுக்கவில்லை?” என்ற கேள்வியையும் அவர் எழுப்பியுள்ளார்.
அதிகாரத்தில் இருந்த காலத்தில் தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களுக்கிடையே நிலவிய முரண்பாடுகளைத் தீர்க்க இவர்கள் எவ்வித ஆக்கபூர்வமான முயற்சிகளையும் எடுக்கவில்லை. மாறாக, அவற்றை தங்களது அரசியல் இலாபங்களுக்காகவே பயன்படுத்தி வந்தனர். தற்போது தங்களது அரசியல் அதிகாரம் பறிபோன பின்னர், திடீரென புதிய கூட்டணிகளைத் தேடி ஓடுவது வெறும் அரசியல் தந்திரோபாயமே தவிர வேறொன்றுமில்லை.
தமிழ் பேசும் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளான கல்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரச்சினை, கோறளைப்பற்று பகுதியில் தொடரும் நிலப் பறிப்புகள், அம்பாறை சிலை விவகாரம், 1990 களில் வடமாகாண முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டபோது, அவர்களின் காணிகள் அபகரிக்கப்பட்டமை போன்ற பிரதான மற்றும் உணர்வுபூர்வமான பிரச்சினைகளுக்கு முறையான தீர்வுகளை எட்டாமல், வெறும் தேர்தல் வெற்றியை மட்டுமே இலக்காகக் கொண்டு இந்த திடீர் கூட்டணிகளை அமைப்பது மக்களை ஏமாற்றும் செயலாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறிப்பாக கல்முனை விவகாரம் போன்ற மிக முக்கியமான விவகாரங்களில் முற்றிலும் முரண்பாடான நிலைப்பாடுகளைக் கொண்டவர்கள், தற்போது எவ்வித கொள்கை இணக்கப்பாடுமின்றி திடீரெனக் கைகோர்ப்பது, அந்தந்தச் சமூகங்களுக்குள்ளேயே பெரும் சந்தேகங்களையும் விரிசல்களையும் ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தங்கள் சமூகங்கள் சார்ந்து நீண்டகாலமாகத் தீர்க்கப்படாமல் இருக்கும் காணிப் பிரச்சினைகள், வாழ்வாதாரப் பிரச்சினைகள் மற்றும் சிவில் உரிமைகள் போன்றவற்றுக்கு கொள்கை ரீதியான தீர்வுகளைக் கண்டறிந்த பின்னரே, தமிழ் பேசும் மக்களிடம் வாக்குகளைக் கேட்க முன்வர வேண்டும். இது அவ்வாறில்லாமல் வெறும் அரசியல் அதிகாரத்தை நோக்கமாகக் கொண்டு, கூட்டணி அமைப்பதை எந்த மக்களாலும் ஏற்றுக்கொள்ள முடியாத செயற்பாடக இருக்கின்றது என மௌலவி முபாறக் அப்துல் மஜீத் தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.
spot_imgspot_img

More like this
Related

5 கிராம் ஐஸ் வைத்திருந்தவருக்கு ஆயுள்!

5 கிராமுக்கும் அதிகமான 'ஐஸ்' போதைப் பொருளைத் தன்வசம் வைத்திருந்து, விற்பனை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்