2025 ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த சாதாரணதர பரீட்சையில் பங்கேற்ற மொத்தம் 225,748 மாணவர்கள் க.பொ.த உயர்தரத்திற்கு தகுதி பெற்றுள்ளனர் எனத் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே அறிவித்தார்.
பரீட்சை முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து நடைபெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அவர், இந்த எண்ணிக்கை முதல் முறையாகப் பாடசாலை பரீட்சார்த்தி மாணவர்களில் 73.16% ஆகும் என்று கூறினார்.
பரீட்சை எழுதியவர்களில் 3.57% ஆக உள்ள 11,790 மாணவர்கள், ஒன்பது பாடங்களிலும் ‘ஏ’ பெறுபேறு பெற்றுள்ளனர் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார். இவர்களில், 11,651 பேர் பாடசாலை பரீட்சார்த்திகள், 139 பேர் தனி பரீட்சார்த்திகள் ஆவர்.
மேலும், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் அறிவியல் மற்றும் கணிதம் ஆகிய இரண்டிலும் மாணவர்களின் செயல்திறனில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அறிவியல் தேர்ச்சி விகிதம் 2024-ல் 69.07% ஆக இருந்த நிலையில், தற்போது 70.1% ஆக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில், கணிதத் தேர்ச்சி விகிதம் 71.06% இலிருந்து 72.03% ஆக அதிகரித்துள்ளது.
இதற்கிடையில், முதல் அல்லது இரண்டாவது முயற்சியில் பரீட்சையெழுதிய 7,419 மாணவர்கள் அனைத்துப் பாடங்களிலும் தோல்வியடைந்தனர். இது மொத்த மாணவர்களில் 2.36% ஆகும். இந்த எண்ணிக்கை, கடந்த ஆண்டு தேர்வில் பதிவான எண்ணிக்கையைப் போன்றே உள்ளது.
2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர பரீட்சை முடிவுகள் ஜூன் 19 அன்று நள்ளிரவில் இணையத்தில் வெளியிடப்பட்டன. இந்த பரீட்சை, நாடு முழுவதும் உள்ள 3,547 மையங்களில் பெப்ரவரி 17 முதல் 26 வரை நடத்தப்பட்டது.
விடைத்தாள்களை மறுமதிப்பீடு செய்வதற்கான இணையவழி விண்ணப்பங்கள், ஜூன் 25 முதல் ஜூலை 8, 2026 வரை ஏற்றுக்கொள்ளப்படும் என்று ஆணையாளர் மேலும் அறிவித்தார்.
2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர பரீட்சை, டிசம்பர் 8 முதல் 17 வரை நடைபெறும் என்றும் அவர் அறிவித்தார்.




