பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில் நேற்று டொராண்டாவில் உள்ள பிஎம்ஓ ஃபீல்டு மைதானத்தில் ‘பி’ பிரிவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் கனடா – போஸ்னியா & ஹெர்சகோவினா அணிகள் மோதின.
ஆட்டத்தின் தொடக்கத்தில் கனடா அணி 65 சதவீதம் பந்தை கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. எனினும் போஸ்னியா & ஹெர்சகோவினா அணி 21வது நிமிடத்தில் முதல் கோல் அடித்து அதிர்ச்சி கொடுத்தது.
கொலாசினாக் கொடுத்த கோர்னர் கிக் பாஸை, முன்கள வீரர் ஜோவோ லுகிச் மிக நேர்த்தியாக தலையால் முட்டி கோலாக மாற்றினார். இதனால் போஸ்னியா & ஹெர்சகோவினா 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. ஜோவோ லுகிச்சுக்கு இது சர்வதேச போட்டியில் முதல் கோலாக அமைந்தது.
இதன் பின்னர் கனடா அணியின் ஜோனதன் டேவிட், டானி ஆகியோரது கோல் அடிக்கும் முயற்சிகளை போஸ்னியா & ஹெர்சகோவினா அணியின் தடுப்பு அரண்கள் தடுத்து நிறுத்தியது.
ஆட்டத்தின் 53வது நிமிடத்தில் ரிச்சி லாரியா அடித்த ஷொட் மூலம் கனடா எளிதாக ஆட்டத்தைச் சமன் செய்திருக்க வேண்டும். ஆனால், போஸ்னியாவின் அனுபவமிக்க வீரர் கொலாசினாக் குறுக்கே பாய்ந்து, பந்தை அற்புதமாகத் தடுத்து கிராஸ்பாரில் மோதச் செய்து, ஆபத்திலிருந்து அணியைக் காப்பாற்றினார்.
ஆட்டத்தின் போக்கை மாற்ற கனடா பயிற்சியாளர் ஜெஸ்ஸி மார்ஷ், 75வது நிமிடத்தில் மாற்று வீரராக சைல் லாரினை உள்ளே அனுப்பினார். மைதானத்துக்குள் வந்த அடுத்த 2 நிமிடங்களில், ப்ராமிஸ் டேவிட் கொடுத்த பாஸை மிக லாவகமாகப் பெற்ற லாரின், பொக்ஸிற்குள் இருந்து பந்தை கோல் வலையின் கீழ் கோர்னருக்குள் அடித்து கோலாக மாற்றினார். இதனால் ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையை எட்டியது.
ஆட்டத்தின் கடைசி நிமிடங்களில் இரு அணிகளும் வெற்றி கோல் அடிக்க தீவிரமாக முயன்றன. கூடுதல் நேரத்தில் சைல் லாரின் அடித்த ஷாட்டை போஸ்னிய டிஃபென்டர்கள் தடுத்ததால், ஆட்டம் 1-1 என சமனில் முடிவடைந்தது. இதனால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டன. பிஃபா உலகக் கோப்பை வரலாற்றில் கனடான அணி புள்ளியை பெறுவது இதுவே முதன்முறையாகும். இதற்கு முன்னர் அந்த அணி உலகக் கோப்பை தொடர்களில் 6 ஆட்டங்களில் விளையாடி அனைத்திலும் தோல்வி கண்டிருந்தது.




